தயாராகுங்க மக்களே! உயரப்போகுது சமையல் கேஸ் விலை: ஏப்ரலில் இரு மடங்காக வாய்ப்பு

By Pothy RajFirst Published Feb 23, 2022, 1:22 PM IST
Highlights

எல்பிஜி சிலிண்டர் விலை வரும் ஏப்ரல் மாதம் இரு மடங்காக விலை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எல்பிஜி சிலிண்டர் விலை வரும் ஏப்ரல் மாதம் இரு மடங்காக விலை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எல்பிஜி கேஸ் மட்டுமல்லாமல், சிஎன்ஜி, பிஎன்ஜி விலையும், மின்சாரத்தின் விலையும் உயரக்கூடும் என சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் சிஎன்ஜி கேஸில் இயக்கப்படும் வாகனத்தின் செலவு கடுமையாக அதிகரிக்கும். இந்த வாயுவைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்திச்செலவும் உயரும். இயற்கை எரிவாயு விலை உயர்வு காரணாக மத்திய அரசு வழங்கும் உரமானியத்தின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே மக்களுக்கு அதிர்ச்சியளித்துவரும் நிலையில் அடுத்ததாக சமையல் கேஸ் விலையும் சேரும். பணவீக்கத்தாலும், விலைவாசி உயர்வாலும் சிரமப்பட்டுவரும் நடுத்தரக் குடும்பத்தினர் ஏப்ரல் முதல் சமையல் கேஸ் விலை உயர்வையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையால் சர்வதேச சந்தையில் எரிவாயு உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை ஏற்படும். அப்போது, இந்த விலை உயர்வை இந்திய மக்களும் ஏப்ரல் மாதத்தில் எதிர்கொள்ள நேரிடும். இதனால் இந்தியாவில் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனாவிலிருந்து மீண்டு உலகப் பொருளாதாரம் தற்போதுதான் மீண்டு வருது என்பது, உலகளவில் எரிவாயுக்கான தேவை அதிகரிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதிகரிக்கும் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, அதாவது உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக இயற்கை எரிவாயு விஷயத்தில் மிகப்பெரிய விலை உயர்வை உலக நாடுகள் சந்திக்க இருக்கின்றன

நீண்டகால ஒப்பந்தம் காரணமாக உள்நாட்டில் இருக்கும் சிஎன்ஜி கேஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உள்ளீட்டுச் செலவு தொடர்ந்து உயர்ந்து வருவதாக புலம்புகின்றன.

கச்சா எண்ணெய் வாங்க நீண்டகாலம் ஒப்பந்தம் செய்துள்ளதால்தான் விலை உயர்விலிருந்து தப்பி்க்க முடியவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, ஸ்பாட் மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் அன்றைய விலைக்கு கொள்முதல் செய்யவும் ஆலோசித்து வருகின்றன

உலகளவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏப்ரல் மாதத்திலிருந்து வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும். அப்போது, விலை விகிதத்தை மத்திய அரசு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். சந்தை வல்லுநர்கள் கூறுகையில், “ எரிவாயுவிலை தற்போது ஒருஎம்எம்பிடியு 2.9 டாலராக இருக்கும் நிலையில் இது 7 டாலராக உயரக்கூடும்” எனச் எச்சரிக்கின்றனர்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தார் கூறுகையில் “ இயற்கை எரிவாயு விலை தற்போதுல்ள 6.13 டாலரிலிருந்து, 10 டாலராக உயரலாம்”எனத் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் இயற்கை எரிவாயு விலை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரலில் விலை என்பது, 2021, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான சர்வதேச சந்தைவிலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இதனால் சிஎன்சி கேஸ் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.15 வரையிலும் அதிகரிக்கலாம்” எனத் தெரிகிறது


 

click me!