
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் மும்பை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் (Lookout Circular) பிறப்பித்துள்ளது. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபரான தீபக் கோத்தாரி என்பவர், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா இருவர் மீது ரூ.60 கோடி மோசடி செய்ததாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் (EOW) புகார் அளித்துள்ளார். பெஸ்டு டீல் டிவி பிரைவேட் லிமிடெட் (Best Deal TV Pvt Ltd) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்வதாக பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக அந்த புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி கொடுத்த உத்தரவாதம்
2015 முதல் 2023 வரை, நிறுவனத்தை விரிவாக்குவதாக கூறி இந்த தொகையைப் பெற்றதாகவும், ஆனால் அதை தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகவும் தீபக் கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார். முதலீடு செய்யும் பணத்தை 12% வட்டியுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாக உறுதியளித்ததாகவும், இதற்கு ஏப்ரல் 2016-ல் ஷில்பா ஷெட்டி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களிலேயே ஷில்பா ஷெட்டி நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், பின்னர் அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்ததாகவும் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் நடவடிக்கை
தற்போது, மும்பை காவல்துறை, ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் பயண விவரங்களை ஆய்வு செய்து வருகிறது. மேலும், நிறுவனத்தின் தணிக்கையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தங்களைப் பற்றி அவதூறு பரப்பும் நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.