2010ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசித்துவரும் லலித் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போவதாகச் சொல்கிறார்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னை ஊழல் மற்றும் பணமோசடியுடன் தொடர்புபடுத்திப் பேசியதற்கான இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி லண்டனில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வசைபாடி இருக்கிறார். "அவர் தான் ஒரு முழு முட்டாள் என அறிந்துகொள்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சுக்காக ராகுல் காந்தி சிறை தண்டனை பெற்று, தனது மக்களவை எம்.பி. பதவியையும் இழந்துள்ளார். அந்த தேர்தல் பிரச்சார உரையில், லலித் மோடி, நிரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோருக்குப் பொதுவாக உள்ள மோடி என்ற பெயர் பற்றி ராகுல் விமர்சித்துப் பேசினார். அதனை எடுத்துத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அந்தத் தீர்ப்பு வெளியான சில நாட்களுக்குப் பிறகு, ராகுல் காந்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து லலித் மோடி அறிவித்துள்ளார்.
i see just about every Tom dick and gandhi associates again and again saying i ama fugitive of justice. why ?How?and when was i to date ever convicted of same. unlike aka now an ordinary citizen saying it and it seems one and all oposition leaders have nothing…
— Lalit Kumar Modi (@LalitKModi)ராகுல் காந்தி தன்னை 'நீதிக்கு பயந்து தப்பியோடியதாக' எதன் அடிப்படையில் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள லலித் மோடி, தான் எந்தக் குற்றத்திலும் தண்டனை பெற்றதில்லை என்றும் 100 பில்லியன் டாலர்களை ஈட்டும் உலகின் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வான ஐபிஎல் தொடரை உருவாக்கி இருக்கிறேன் என்றும் கூறியுள்ள லலித் மோடி, காந்தி குடும்பத்தைவிட தனது குடும்பம் இந்தியாவிற்கு அதிகம் நன்மை செய்துள்ளதாகவும் சொல்லிக்கொள்கிறார்.
ராகுல் காந்தி தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சவால் விடுத்துள்ள லலித் மோடி, அவரை நீதிமன்றத்தில் சந்திக்கக் காத்திருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய லலித் மோடி, அவர்களின் சொத்துக்களின் முகவரி மற்றும் புகைப்படங்களைத் தன்னால் தரமுடியும் என்றும் சொல்கிறார். அவதூறுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றினால் தான் இந்தியா திரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இதுவரை லலித் மோடியின் ட்வீட் குறித்து பதிலளிக்கவில்லை. அவரது தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவரது தரப்பு கூறியுள்ளது.