மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

By Manikanda PrabuFirst Published Apr 9, 2024, 2:50 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்து முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. எனினும் சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறவில்லை.

எதிர்வரவுள்ள தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா எனும் கூட்டணி அமைத்து ஓரணியில் திரண்டுள்ளன.

இருப்பினும், இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறவில்லை. குறிப்பாக, காங்கிரஸுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.

அந்த வகையில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டி என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் இழுபறி நிலவி வந்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி, ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனும் தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் கட்சி சுமூகமாக முடித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நீண்ட இழுபறிக்கு பின்னர் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, சரத்பவார், உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநில தலைவர் நானோ பட்டேல் ஆகிய 3 பேரும் கூட்டாக அறிவித்தனர்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா (உத்தவ் தாக்கரே) - தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் கொண்ட மகாவிகாஸ் அகாடி, இந்தியா கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு சுமூகமாக எட்டப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 48 தொகுதிகள் கொந்த மகாராஷ்டிராவில், சிவசேனாவுக்கு (உத்தவ் அணி) 21, காங்கிரஸ் கட்சிக்கு 17, தேசியவாத காங்கிரஸுக்கு (சரத் பவார் அணி) 10 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பாஜக பெண் நிர்வாகி கைது!

கடந்த 2019 தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்து 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒன்றுபட்ட தேசியவாத காங்கிரஸ் 19 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதேசமயம், 25 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக, மகாவிகாஸ் அகாடி கட்சிகளிடையே மகாராஷ்டிராவில் எட்டப்பட்டுள்ள இந்த உடன்பாடு, எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

click me!