இந்தியா கூட்டணி, தற்போது பாஜக கூட்டனியில் உள்ள நிதிஷ்குமார், சந்திரபாபு நாடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.
543 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய தரவுகளின் படி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 231 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் மட்டும் தனித்து 98 இடங்களிலும். பாஜக 239 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று கணித்திருந்த நிலையில், அதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் கனவை தகர்த்த உத்திரபிரதேசம்., ராஜஸ்தான்.. வட இந்தியாவில் காங்கிரஸ் சாதித்தது எப்படி?
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கார்கே “தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இது பொதுமக்களின் முடிவு, பொதுமக்களின் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி. இது பொதுமக்களுக்கும் மோடிக்கும் இடையேயான போர் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தெளிவான தீர்ப்பு. இது மோடிக்கு எதிரான மக்களின் தீர்ப்பு. இது மோடியின் தார்மீக, அரசியல் தோல்வி. எங்கள் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு தாக்கப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள்," என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் பாஜகவுக்கு உதவியதா? உ.பியில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்?
இதை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி “ இது தேர்தல் அரசியல் சக்திக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, சிபிஐ, நீதித்துறை மற்றும் அமலாக்க அமைப்புகளை பாதுகாப்பதற்கான போராட்டம் என்று கூறினார்.
அரசியல் சாசனத்தின் நகலை கையில் வைத்திருந்து பேசிய அவர் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம்... இந்தியக் குடிமக்கள் அதைப் பாதுகாக்க முயற்சி செய்வார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம், அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து இந்தியா கூட்டணி, தற்போது பாஜக கூட்டனியில் உள்ள நிதிஷ்குமார், சந்திரபாபு நாடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி “ எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் நாளை ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளோம். இந்தக் கேள்விகள் அங்கு எழுப்பப்பட்டு பதில் அளிக்கப்படும். கூட்டணி கட்சிகளிடம் கேட்காமல் எந்த அறிக்கையும் வெளியிட மாட்டோம்.” என்று தெரிவித்தார்.