உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றும், அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமுமான உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கை ஓங்கியுள்ளது. பாஜக கூட்டணி அம்மாநிலத்தில் பின்னடைவை சந்துள்ளது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.
undefined
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 612970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை 152513 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை எவ்வளவு வெற்றி வித்தியாசமோ அதைவிட குறைவாகவே இந்த முறை வாக்குகளை பெற்றிருக்கிறார்.
பிரதமரை எதிர்த்து களம் கண்ட காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியானது நாட்டின் விவிஐபி தொகுதியாகும். இந்த தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். வாரணாசியில் பிரதமர் மோடி உட்பட 7 பேர் மட்டுமே களம் கண்டனர். இதில், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முக்கியமானவராக பார்க்கப்பட்டார்.
தொடக்கம் முதலே பிரதமர் மோடிக்கு அவர் பெரும் சவாலாக இருந்தார். முதல் சில் சுற்றுகளின் பிரதமர் மோடி பின்னடைவை சந்திக்கும் அளவுக்கு அஜய் ராய் முன்னிலை வகித்தார். அதன் பின்னர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக களம் மாறியது, இறுதியில், 152513 வாக்குகள் வித்தியாசத்தில் 612970 வாக்குகள் பெற்று பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.