Loksabha Election 2024 Result மத்தியில் ஆட்சி அமைவதற்கு காரணமாகும் முக்கிய நபர்கள்!

By Manikanda Prabu  |  First Published Jun 4, 2024, 3:15 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், சில முக்கிய கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜகவுக்கு சாதகமாக இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு அதிகமாக பாஜக தனித்து வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்புகள் கணித்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Latest Videos

undefined

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சியோ அல்லாது கூட்டணியோ ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவால் மத்தியில் ஆட்சியமைக்க முடியும். அதேபோல், பாஜகவில் உள்ள கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியும்.

இதன் மூலம் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதால், கூட்டணி கட்சிகளாக இருக்கும் மாநிலக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் பிரதான மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் அக்கட்சிகள் முன்னிலை நிலவரம் குறைவாகவே உள்ளது.

Loksabha election result 2024 களையிழந்த பாஜக அலுவகம்... கொண்டாட்டத்தில் காங்கிரஸ்..!

இதில், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளன. இந்த கட்சிகளை காங்கிரஸ் கட்சி தனது பக்கம் இழுக்கும் பட்சத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையவும் வாய்ப்புள்ளது.

கூட்டணி ஆட்சி தான் மத்தியில் அமையும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மத்திய உள்துறை, பாதுகாப்பு துறை, நிதித்துறை, வெளியுறவுத் துறை போன்ற முக்கியத்துறைகளை நிச்சயம் கூட்டணி கட்சிகள் கேட்டு நிர்ப்பந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவுக்கு அது தலைவலியை ஏற்படுத்தும். மேலும், பாஜக திட்டமிட்டிருந்த சில சட்ட திருத்தங்களையும் நிறைவேற்றுவது அக்கட்சிக்கு கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!