மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்ற நிலையில், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
மணிப்பூர் மாநிலத்தில் உட்புற மணிப்பூர், வெளிப்புற மணிப்பூர் என மொத்தம் இரண்டு மக்களவை தொகுதிகளில் உள்ளன. அதில், உட்புற மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு முதற்கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
பேரிடர் காலத்தில் அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஃபேஷன் ஆகிவிட்டது: பிரதமர் மோடி விமர்சனம்
ஆயுதம் ஏந்தியவர்கள் வாக்காளர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டியதாக புகார்கள் எழுந்தன. பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும் தீ வைத்தது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், வன்முறை காரணமாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 11 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் மேகசந்திரா தலைமையிலான அக்கட்சியினர், வன்முறை காரணமாக மொத்தம் 43 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.