
எதிர்வரும் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை விறுவிறுப்பாக வெளியிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 39 இடங்களில் போட்டியிட உள்ள தங்களுடைய வேட்பாளர் பட்டியலை தற்பொழுது அறிவித்துள்ளது காங்கிரஸ்.
இதில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வயநாட்டில் போட்டியிட உள்ள நிலையில், சசிதரூர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆறு இடங்களுக்கும், கர்நாடகாவில் ஏழு இடங்களுக்கும், கேரளாவில் 16 இடங்களுக்கும், மேகாலயாவில் இரண்டு இடங்களுக்கும், தெலுங்கானாவில் நான்கு இடங்களுக்கும், லட்சதீவு, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் தலா ஒரு இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
“முதல்வர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீசியா” பாதிப்பு - அண்ணாமலை பரபரப்பு கருத்து
தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியல் இந்த முதற்கட்ட பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தனது 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அறிவித்த ஒரு வாரத்திற்குள், ராகுல் காந்தி, சசி தரூர் மற்றும் பூபேஷ் பாகேல் உட்பட 39 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இப்பொது அளித்துள்ளது. ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுவார், ஆனால் அமேதியில் 2019 ஆம் ஆண்டைப் போல அமேதியிலும் களமிறங்குவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் வென்ற கேரளாவின் ஆலப்புழாவில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடியாத நிலையில் விரைவில் தமிழகத்திற்கான பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் இருந்து பெரும்பாலான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், அங்கு காங்கிரஸ் மீதமுள்ள நான்கு இடங்களை அதன் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.