வரதட்சணையால் அதிர்ந்து போன மணமகள் வீட்டார் : மாப்பிள்ளை கேட்டது என்ன தெரியுமா?

First Published Jun 25, 2018, 12:29 PM IST
Highlights
rural Odisha a groom demands a growing dowry


புவனேஸ்வர்: திருமணத்தின் போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு  பெறுவது வாடிக்கையான ஒன்று. ஆனால் ஓடிசாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பாலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் காந்த் பிஸ்வால் என்பவர் உள்ளூரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது திருமணத்துக்கு பெண் தேடினார். ஆனால் இறுதியில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை  ரேஷ்மி ரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். அப்போது மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை என்பன போன்ற நிபந்தனைகள் வைத்தார். ஆனால் பிஸ்வால் கேட்ட  வரதட்சணையை கேட்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். 

தனது கிராமத்தில் நட்டு வைக்க 1001 மரக்கன்றுகள் கொடுத்தால் போதும் என்றார். இதை சற்றும் எதிர்பாராத மணப்பெண்ணின் தந்தை மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு சம்மதித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால்-ரேஷ்மி ரேகா திருமணம் நடந்தது.  மணாளனின் விருப்பம் மனையாளுக்கும் மகிழ்ச்சி அளிக்கவே திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக 1001 மரக்கன்றுகள் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அவை பகிர்ந்து கொடுக்கபட்டன. இயற்கை அழிந்து வரும் சூழ்நிலையில்  பசுமையை விரும்பும் இந்த ஆசிரியருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

click me!