
நவன்சாரா மாவட்டத்தில் பாக்வாரா-பாங்கா தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்த டிரக் ஒன்று கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்தனர். வலது பக்கமாக தனது டிரக்கை ஓட்டுநர் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது டிரக் மோதி கவிழ்ந்தது.
காரில் பின் பக்கம் அமர்ந்து பயணித்து வந்த தாய், தந்தை மற்றும் மகன் மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி மற்றொரு கார் மீது மோதியதில் அந்தக் காரும் சேதமடைந்தது. இந்தக் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த பஞ்சாப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். டிரக் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. டிரக் நின்று வராமல், எதிரே வாகனங்கள் வருவது தெரிந்தும் வேகமாக வந்து திரும்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.