
லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் தம்பியுமான ராமச்சந்திர பாஸ்வான் (58) இன்று மாரடைப்பால் காலமானார்.
நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராமச்சந்திர பாஸ்வான். லோக் ஜனசக்தி கட்சியின் சார்பாக சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலம் சம்ஸ்திப்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரரான ராமச்சந்திர பாஸ்வான் ஒரு வார காலமாக உடல்நலம் குன்றி டெல்லியில் உள்ள ராம் மனோகர்லோகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. மறைந்த எம்.பி.க்கு சுனைனா குமாரி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இறப்புக்கு அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.