கனவாக கலைகிறதா..? விக்ரம் லேண்டர்.. இன்றுடன் முடிகிறது 14 நாட்கள் கெடு!!

By Asianet TamilFirst Published Sep 20, 2019, 11:30 AM IST
Highlights

ஆர்பிட்டர் மூலம் கண்டறியபட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 22 ம் தேதி அனுப்பப்பட்டது. விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ம் தேதி நிலவில் தரையிறங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்க திட்டமிட்டபடி விக்ரம் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவில் தரையிறங்க சென்று கொண்டிருந்தது. கடைசி நிமிடங்களில் லேண்டர் உடனான தொடர்பு துண்டானது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். லேண்டரை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ஆர்பிட்டர் மூலமாக விக்ரம் லேண்டர் இருப்பிடம் கண்டறியப்பட்டு அதனுடன் தொடர்பு ஏற்படுத்த தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வந்தன. 14 நாட்களுக்குள் தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரோ சார்பாக கூறப்பட்டது. 20 ம் தேதிக்கு பின்னர் நிலவின் தென்பகுதியில் இருள் சூழத் தொடங்கி விடும் என்பதால் அதற்கு முன்பாக இந்த செயலை முடிக்க வேண்டும்.

நாசாவின் எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் மூலமாகவும் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நிலவில் இருள் சூழத் தொடங்கியுள்ளதால் அனைத்து முயற்சிகளும் பின்னடைவில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்றுடன் 14 நாட்கள் முடிவடைவதால் விக்ரம் லேண்டர் ருடன் தொடர்பு ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

இஸ்ரோ தங்களுக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கு தெரிவித்த நம்பிக்கையான வார்த்தைகளில், "உலகமெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கையாலும், கனவுகளாலும் நாங்கள் உத்வேகம் பெற்று முன்னோக்கி நடைபோடுவதை தொடர்வோம். வானையே எப்போதும் நாங்கள் இலக்காக கொள்வோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!