
மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 34 சதவீதத்தினர் 10 வகுப்பிலும், 32 சதவீதத்தினர் 12 ஆம் வகுப்பிலும் தோல்வி அடைந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அதில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 4 பாடங்களில் தோல்வி அடைந்ததை அறிந்த பெற்றோர், தன் மகன் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது என்று கருதி, தோல்வியையும் கொண்டாடும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாணவனை ஊர்வலமாக அழைத்துச் சென்று அவருக்கு பூங்கொத்துக்களை கொடுத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.
பெற்றோரின் செயலைக் கண்டவர்கள் குழப்பமடைந்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, சிறிய வயதில் அவன் சந்திக்கும் தோல்வி, அவனது மன உறுதியை சிதைத்து விடக் கூடாது. இது அவனது கடைசி தேர்வல்ல என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவும் இவ்வாறு செய்வதாக தெரிவித்தனர். வாழ்வின் அனைத்து படிநிலைகளையும் நேர்மறையாக அணுகும் வகையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எங்கள் மகன் உணர வேண்டும் என்றும் மாணவனின் தந்தை கூறினார்.