
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால், உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்துகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சாலை விதிகளை மதிக்காதது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுவது ஆகியவை விபத்துகள் ஏற்படுவதற்கான பிரதான காரணங்கள்.
கடுமையான தண்டனைகளின் மூலமே இதுபோன்ற விதிமீறல்களை களையமுடியும். அப்படியான ஒரு அதிரடி நடவடிக்கையைத்தான் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த வாரம் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் ஒரு கோர விபத்து நடந்தது. 56 பயணிகளுடன் பேருந்தை இயக்கிவந்த ஓட்டுநர், செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியுள்ளார். பலீர்காட் என்ற பாலத்தின் மீது செல்லும்போது, எதிரேவந்த லாரிக்கு வழிவிடுவதற்காக செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை அதிகமாக திருப்பியதில், பால தடுப்பை உடைத்து பேருந்து நதிக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில் 46 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பயணிகள் எவ்வளவோ வலியுறுத்தியும் அதை பொருட்படுத்தாமல் ஓட்டுநர் செல்போனில் பேசியுள்ளார். அதுவே விபத்துக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுபோன்ற செயல்களை தடுக்கும் நோக்கில் மேற்கு வங்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. செல்போனில் பேசிய படி வாகனம் ஓட்டினால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்குற்றத்தில் சிக்கும் பேருந்து, லாரி போன்ற கனரக வாகன ஓட்டுநர்களின் உரிமம் முதல்முறையிலேயே ரத்து செய்யப்பட உள்ளது. மற்ற சிறிய நான்கு சக்கர வாகனங்களை செல்போனில் பேசியபடி ஓட்டுவொருக்கு ஒருமுறை மட்டும் எச்சரிக்கையும், அடுத்தமுறை உரிமம் ரத்தும் செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தவறு செய்யும் ஓட்டுநர்களின் வீடியோ பதிவுகளுடன் வாட்ஸ் அப்பில் ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே இதுபோன்ற அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ள முதல் மாநிலம் மேற்கு வங்கம் தான்.