மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் 91 வயதில் காலமானார்

By SG Balan  |  First Published Dec 25, 2024, 11:49 PM IST

முதுபெரும் மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் 91 வயதில் புதன்கிழமை காலமானார். ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.


பிரபல எழுத்தாளரும், ஞானபீட விருது பெற்றவருமான எம்.டி.வாசுதேவன் நாயர் 91 வயதில் புதன்கிழமை காலமானார். மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, இருதயநோய் நிபுணர்களும் தீவிர சிகிச்சை நிபுணர்களும் அடங்கய மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது.

Tap to resize

Latest Videos

undefined

எம்டி என்று பிரபலமாக அறியப்பட்ட எம்.டி. வாசுதேவன் நாயர், 9 நாவல்கள், 19 சிறுகதைகளின் தொகுப்புகள் எழுதியவர். 6 திரைப்படங்களை இயக்கியுள்ளார். சுமார் 54 திரைக்கதைகளையும் படைத்துள்ளார். சுமார் ஏழுபது ஆண்டுகளாக நீடித்து வந்த எழுத்தப் பயணத்தில் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

அவரது நாவல் 'நாலுகெட்டு' மலையாள இலக்கியத்தில் ஒரு உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது. மஞ்சு, காலம், இரண்டாம் இடம் உள்ளிட்ட பல பாராட்டப்பட்ட படைப்புகளையும் எழுதியுள்ளார்.

இவரது இலக்கிய சாதனைகளை பாராட்டி 1995இல் இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கப்பட்டது. கேந்திர சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, வள்ளத்தோல் விருது, எழுத்தச்சன் விருது, மாத்ருபூமி இலக்கிய விருது, ஓ.என்.வி. இலக்கிய விருது என பல விருதுகள் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

2005ஆம் ஆண்டில், பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 2013 இல் மலையாள சினிமாவில் வாழ்நாள் சாதனைக்கான ஜே.சி டேனியல் விருதைப் பெற்றார். 2022இல், கேரள அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான கேரள ஜோதி விருதைப் பெற்றார்.

எம்டி மாத்ருபூமி வார இதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், மலையாள இலக்கியத்தை உலக இலக்கியத்தில் முன்னணிக்குக் கொண்டு வந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

"இது மலையாள இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கேரளாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்று விஜயன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்.டி. வாசுதேவன் நாயருக்கு வாசகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் உள்பட அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

click me!