டெல்லி போராட்டத்தில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு… ப.சிதம்பரத்திற்கு இடதுபக்க விலா எலும்பில் முறிவு!!

Published : Jun 13, 2022, 09:29 PM IST
டெல்லி போராட்டத்தில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு… ப.சிதம்பரத்திற்கு இடதுபக்க விலா எலும்பில் முறிவு!!

சுருக்கம்

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் விடுதலைக்கு முன்னர் பண்டித ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டஅசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதன் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின் 2010ல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா, ராகுல் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இதில் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக, சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் வேறு ஒரு தேதியில் ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார். அதேபோல் ராகுல் காந்தி, வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரும் அவகாசம் கோரி இருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தி இன்று ஆஜரானார். இதனிடையே ராகுல் காந்தியை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளுவின் போது ப.சிதம்பரத்தை போலீசார் தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் அவரது இடது பக்க விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் இடது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காவலர்கள் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!