
மக்களின் நலனுக்காக வேகமான முடிவுகளை எடுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத்துக்கு புகழாரம் சூட்டியுள்ள சிவசேனா கட்சி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரபட்நாவிஸ் இவரிடம் இருந்து அதிகம் கற்க வேண்டும் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் நாளேடான ‘சாம்னா’வில் இது குறித்து தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
ஆதித்யநாத் தான் பதவி ஏற்கும் போது, அனைவரின் மனதிலும் இருந்து தவறான கருத்துக்களும், விமர்சனங்களும் பொய் என நிரூபித்துள்ளார். மக்களின் நலனுக்காக வேகமான முடிவுகளை எடுத்து வருகிறார்.
தனது மாநிலத்தை முன்னேற்றுவதற்காக ஆதித்யநாத்தின் செயல்பாடுகள், உழைப்பு, பணி அனைத்தும் பாராட்டும் விதத்தில் இருக்கிறது. மஹாராஷ்டிராவில் உள்ள ஆட்சியாளர்கள் விவசாயிகளுக்கு பயிர்கடன் பிரச்சினையை பற்றி சிறிதாவது புரிந்திருந்தால் கூட அது சிறப்பானது தான்.
யோகி ஆதித்யநாத் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்தார். ஆனால், மஹாராஷ்டிரா அரசு, யோகியின் திட்டங்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது, செயல்படாமல் இருக்கிறது. கடன் தொல்லை தாங்க முடியாமல் இன்னும் எத்தனை மக்கள் சாகப் போகிறார்கள் என காத்திருக்கிறது.
பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டு, அதை தீர்க்கும் தகுதியில்லாமல் இருப்பது பயனில்லை. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள், யோகி ஆதித்யநாத்திடம் இருந்து தீவிரம் என்றால் என்ன என்பதை கற்றுவாருங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.