இன்று சுஷ்மா ஸ்வராஜுக்கு பிறந்தநாள்: இரு நிறுவனங்களுக்கு பெயர்சூட்டிய மத்திய அரசு

By Asianet TamilFirst Published Feb 14, 2020, 4:12 PM IST
Highlights

சுஷ்மா ஸ்வராஜின் 68-வது பிறந்த நாள் நாள் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, மத்திய வெளியுறவுத் துறையின் கீழ் வரும் இரு முக்கியமான நிறுவனங்களுக்கு அவரின் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது.

டெல்லியில் உள்ள தி பிரவாசி பாரதிய கேந்திரா எனும் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நிறுவனம் இனிமேல் சுஷ்மா ஸ்வராஜ் பவன் என்று அழைக்கப்படும். அதேபோல, வெளியுறவுச் சேவை நிறுவனம் (தி ஃபாரின் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்) இனிமேல் சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் சர்வீஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான அரசு முதல் முறையாக அமைந்தபோது, அதில் வெளியுறவுத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ். உலகில் எந்த இடத்தில் இந்தியர்களுக்கு எந்தவிதமான துன்பும் நேர்ந்தாலும், அல்லது ட்விட்டரில் உதவி கோரினாலும் தயங்காமல், அதைத் தொடர்ந்து கண்காணித்து உதவிகளைச் செய்யக்கூடியவராக சுஷ்மா திகழ்ந்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், " மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மதிப்பிட முடியாத சேவைகள், இந்தியர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து அவர்களைக் காத்தது போன்றவற்றால் மத்திய வெளியுறவுத் துறையின் இரு புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு சுஷ்மா ஸ்வராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜின் பிறந்த நாள் நாளை(14-ம்தேதி) வருவதையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் இருந்த அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!