
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். லாலுவின் இந்த முடிவு, பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தார்மீக விழுமியங்ளை புறக்கணித்ததோடு, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் உயர்மட்டக் கூட்டம் ஒன்றிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேஜ் பிரதாப் யாதவின் சமீபகால நடவடிக்கைகள், குறிப்பாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கட்சிக்குள் அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள், லாலுவின் அதிருப்திக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
கட்சி வட்டாரங்கள் மற்றும் லாலுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், தேஜ் பிரதாப் யாதவ் குடும்பத்திற்குள் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்கி வந்ததாகவும், லாலுவின் கட்சியின் அரசியல் நிலைமைக்கு இடையூறாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கட்சிக்குள்ளும், வெளியிலும் தனது தந்தையின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தேஜ் பிரதாப் யாதவ் மீது லாலு எடுத்துள்ள மிகக் கடுமையான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தேஜ் பிரதாப் யாதவ் ஏற்கனவே தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். அண்மையில் அனுஷ்கா யாதவ் என்பவருடன் தேஜ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
சில மாதங்களில் தேர்தல் வரும் சூழலில், இந்த நீக்கம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்குள் ஒரு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லாலுவின் அரசியல் வாரிசாகத் தேஜஸ்வி யாதவ் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேஜ் பிரதாப்பின் நீக்கம் கட்சியின் எதிர்கால வியூகங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.