
ரஜினி மகளிர் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிர் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கர்நாடகாவில் புதிதாக அமையவுள்ள காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில், மஜத தலைவர் குமாரசாமி, பெங்களூரு ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரிடம், புதிதாக பதவியேற்க உள்ள கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு பகிர்ந்து அளிப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படவேண்டும் என்று ரஜினி கூறியது பள்ளி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த குமாரசாமி, கர்நாடக அணைகளை பார்க்க வருமாறு ரஜினிக்கு நான் அழைப்பு விடுகிறேன். அங்கிருக்கும் அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையை வந்து பார்க்கட்டும். இங்கு போதுமான தண்ணீர் இல்லை. அவர் இங்கு வந்து நேரில் பார்த்தால் நிலைமையைப் புரிந்து கொள்வார் என்று கூறினார்.