
பிபர்ஜாய் புயல் மணிக்கு 145 கிமீ வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் ஏற்படுத்தக் கூடிய சேதம் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 74,000 மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
சுமார் 7,516 கிமீ கடலோரப் பகுதியைக் கொண்ட இந்தியா, உலகின் வெப்பமண்டல சூறாவளிகளில் சுமார் 8 சதவீதத்திற்கு ஆளாகிறது. கிழக்குக் கடற்கரையையொட்டிய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள், மேற்குக் கடற்கரையையொட்டிய கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் என 9 கடலோர மாநிலங்களில் உள்ள சுமார் 32 கோடி மக்கள் கடுமையான புயல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை, பெரும்பாலான புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகி நாட்டின் கிழக்குக் கடற்கரையைத் தாக்குகின்றன. இருப்பினும், கடந்த சில 10 ஆண்டுகளாக அரபிக்கடலில் ஏற்படும் புயல்களின் தீவிரம் கணிசமாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முதல் ஆறு வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகின்றன, அவற்றில் இரண்டு அல்லது மூன்று கடுமையானதாக இருக்கலாம் என அரசாங்க தரவு கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பல பெரிய புயல்கள் தாக்கி கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்;
டக்டே புயல் (2021)
கொரோனா இரண்டாவது அலையோடு இந்தியா போராடிக் கொண்டிருந்தபோது, மிகக் கடுமையான புயலாக வகைப்படுத்தப்பட்ட டக்டே புயல் 2021ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது அதிகபட்சமாக 185 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குஜராத் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிர மாநிலங்களும் டக்டே புயலால் பாதிக்கப்பட்டன. அம்மாநிலங்களிலும் அப்புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஆம்பன் புயல் (2020)
1999 ஆம் ஆண்டு ஒடிசாவின் சூப்பர் சூறாவளிக்குப் பிறகு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூப்பர் புயலான ஆம்பன், 2020ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தரவன சதுப்புநிலக் காடுகளுக்கு அருகே கரையைக் கடந்தது. உலக வானிலை அமைப்பின் (WMO) தகவலின்படி, வட இந்தியப் பெருங்கடலில் பதிவாகிய அம்பன் புயலால், இந்தியாவில் சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் சிக்கி, இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 129 பேர் உயிரிழந்தனர்.
ஃபானி புயல் (2019)
ஃபானி புயல் 2019ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி ஒடிசாவின் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 175 கிமீ வேகத்தில் காற்று வீசியது. மிகவும் கடுமையான இந்த புயலானது 64 உயிர்களை காவு வாங்கியது. வீடுகள், மின் இணைப்புகள், விவசாய நிலங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் என உட்கட்டமைப்புகள் கடுமையான சேதமடைந்தன.
பிபோர்ஜாய் புயலின் விண்வெளி காட்சியை படம் பிடித்த அமீரக வீரர் நெயாடி
வர்தா புயல் (2016)
வர்தா புயல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னை அருகே கரையைக் கடந்தது. இது மிகக் கடுமையான புயல் என வகைப்படுத்தப்பட்டது. இந்த புயலில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். உட்கட்டமைப்புகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னை மற்றும் அண்டை பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற உதவியது.
ஹுட்ஹுட் சூறாவளி (2014)
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளை கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹுட்ஹுட் புயல் தாக்கியது. இதில் சிக்கி சுமார் 124 பேர் உயிரிழந்தனர். கட்டிடங்கள், சாலைகள் என உட்கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது. கனமழை, பலத்த காற்று, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
ஃபைலின் புயல் (2013)
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் அருகே மணிக்கு 200 கிமீ வேகத்தில் பலத்டஹி காற்றுடன் ஃபைலின் புயல் கரையை கடந்தது. அம்மாநிலத்தின் 18 மாவட்டங்களில் வசித்து வந்த 13.2 மில்லியன் மக்கள் இந்த புயலால் பாதிக்கப்பட்டனர். புயலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கைகள், பேரிடர் படையின் தயார்நிலை காரணமாக பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.