
டுவிட்டரில் தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரயிலில் கடத்தி செல்லப்பட்ட சிறுமிகளை ரயில்வே போலீஸார் மீட்டுள்ளனர். டுவிட்டரில் புகார் பதிவிட்டவருக்கும், உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸாருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பீகார் மாநிலம் நர்கதியாகஞ்ச் நகரிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம், இடா நகருக்கு 26 சிறுமிகள், முசாஃபர்பூர்-பந்த்ரா அவாத் விரைவு ரயிலில் சனிக்கிழமை(நேற்று) கடத்திச் செல்லப்பட்டனர். அந்த ரயிலில் பயணித்த ஆதர்ஷ் ஸ்ரீவஸ்தவா என்பவர் எஸ்5 பெட்டியில் இந்தச் சிறுமிகள் இருந்ததை பார்த்திருக்கிறார். சிறுமிகள் அனைவரும் அழுதுகொண்டு இருந்ததால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து டுவிட்டரில் இந்த தகவலை பகிர்ந்த ஆதர்ஷ், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு தனது பதிவை டாக் செய்துள்ளார். இதையடுத்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் பகிரப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கப்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் 2 பேர் சாதாரண உடையில் அந்தப் பெட்டியில் ஏறி சோதனை செய்தபோது சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோரக்பூர் ரயில் நிலைய போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு அனைத்து சிறுமிகளையும் போலீஸார் மீட்டனர். சிறுமிகளைக் கடத்திச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமிகளால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெளிவாக கூற இயலாததை அடுத்து, சிறார் நலக் குழுவிடம் சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகள் கடத்தி செல்லப்பட்டதாக போலீஸாரிடம் புகார் அளித்த பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.