கனடாவுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அந்நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் அடுத்த 5 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அடுத்து, கனடா தூதரக அதிகாரி ஒருவரை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதியின் மரணம் தொடர்பாக இந்தியா-கனடா இடையே முரண்பாடு வலுத்தள்ளது. இச்சூழலில் செவ்வாய்கிழமை இந்தியாவுக்கான கனடாவின் தூதரக அதிகாரி கேமரூன் மேக்கே டெல்லியில் சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவுத்துறை தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டார்.
undefined
அப்போது அவரிடம் கனடா பிரதமர் இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றும் கனடாவின் முடிவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரி ஒருவர் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காலிஸ்தான் தலைவர் கொலைக்கு இந்தியா காரணமா? கனடா பிரதமர் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா
முன்னதாக, ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தக் கருத்து தூண்டிவிடப்பட்டது என்றும் அபத்தமானது என்றும் செவ்வாய்க்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் கூறியுள்ளது.
கனடா பிரதமரின் அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், "கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டுவது அபத்தமானது, தூண்டிவிடப்பட்டது ஆகும். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் எங்கள் பிரதமரிடம் நேரிலும் முன்வைத்தார். அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் ‘வெளிநாட்டு சக்திகள்’ இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் பங்கு இருப்பதாக அவர் கூறியதாக வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கனடா சார்பில் இதைப்பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு கனடா ஒரு மூத்த இந்திய தூதர் ஒருவரையும் அந்நாட்டில் இருந்து வெளியேற்றியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாகவே மூத்த இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியுள்ளதாக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் உள்ள குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்திற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.