
காஷ்மீர் விவகாரத்தில் ஹூண்டாய், கியா ஆகிய கார் நிறுவனங்கள் சர்ச்சைக்குரிய கருத்தை கூறிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டு விளக்க அறிக்கையும் வெளியிட்டன. அந்தவரிசையில் இப்போது கேஎஃப்சி உணவு நிறுவனமும் இணைந்துள்ளது.
காஷ்மீர் ஒற்றுமை தினம் (பிப்ரவரி 5) என்று பாகிஸ்தானால் கடைபிடிக்கப்பட்டும் பிப்ரவரி 5ம் தேதியன்று ஹூண்டாய் கார் நிறுவனத்தின் பாகிஸ்தான் நிர்வாகம் சார்பில் டுவிட்டரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக டுவீட் செய்யப்பட்டது.
காஷ்மீருக்காக தங்களை தியாகம் செய்த காஷ்மீர் சகோதரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் சுதந்திர போராட்டத்திற்கு துணை நிற்போம் என பதிவிட்ட ஹூண்டாய் நிறுவனம், #KashmirSolidarityDay #HyundaiPakistan என இரண்டு ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டிருந்தது.
அதேபோல, கியா கார் நிறுவனமும் காஷ்மீர் விடுதலைக்காக துணை நிற்போம் என்று அதன் கிராஸ்ரோடு டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தது.
அதனால் கடுங்கோபமடைந்த இந்தியர்கள், ஹூண்டாய் மற்றும் கியா கார் நிறுவனங்களுக்கு எதிராகவும், இந்த கார்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரப்பினர். அதுமட்டுமல்லாது, அந்த கார்களை புக்கிங் செய்திருந்தவர்கள், அவற்றை கேன்சல் செய்தனர். ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிர்ப்புகள் வலுக்க, அதுதொடர்பாக ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்தியா எங்கள் நிறுவனத்தின் 2வது வீடு. இந்தியாவின், இந்தியர்களின் நாட்டுப்பற்றை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். இந்தியாவிற்கு எதிரான கருத்தை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. நாங்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என்று ஹூண்டாய் இந்தியா விளக்கமளித்தது.
இந்நிலையில், கேஎஃப்சி பாகிஸ்தான் நிறுவனமும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியிருக்கிறது. அதற்கு கேஎஃப்சி இந்தியா நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள கேஎஃப்சி இந்தியா நிறுவனம், கேஎஃப்சியின் வேறு நாட்டு(பாகிஸ்தான்) சமூக வலைதள பதிவில் இடப்பட்ட பதிவிற்காக நாங்கள்(கேஎஃப்சி இந்தியா) பகிரங்கரமாக மன்னிப்பு கேட்கிறோம். இந்தியாவை மதிக்கிறோம். இந்தியர்களுக்காக சேவையாற்றுவதை பெருமையுடன் தொடர்வோம் என்று கேஎஃப்சி இந்தியா மன்னிப்பு கேட்டுள்ளது.