
கேரள மாநிலம், இடுக்கி அருகே உள்ள மைலாடும்பாறை பகுதியில், ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு புலி ஒரு நாயைத் துரத்தியபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பள்ளத்தில் விழுந்தது. நாயும் புலியும் அந்தப் பள்ளத்தில் சிக்கிக்கொண்டன. தமிழ்நாடு - கேரளா எல்லைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் காலை 7 மணியளவில் வனத்துறையினருக்கு தெரியவந்தது. தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். புலிக்கு மயக்க மருந்து செலுத்தி, பின்னர் பள்ளத்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தொலைக்காட்சி சேனல்களில் வெளியான புகைப்படங்களில், இரண்டு விலங்குகளும் பள்ளத்தில் ஒன்றுகொன்று அருகில் படுத்திருப்பதைக் காணமுடிகிறது. வனத்துறையினர் வரும் வரையிலும் பள்ளத்தில் விழுந்த புலி, நாய் இரண்டும் நலமாகவே இருந்தன.
சம்பவம் நடந்த இடம் தமிழ்நாடு வனச் சரகம் மற்றும் பெரியார் சரணாலயம் இடையே அமைந்துள்ளது. பொதுவாக புலிகள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புலிக்கு மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், புலி பெரியார் புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், நாயும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக புலி நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதால் இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.