
நாட்டிலேயே முதல்முறையாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை கேரள மாநில அரசு தொடங்கியுள்ளது.
‘ஷீ-பேட்’(shepad) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதல்கட்டமாக 300 அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முறைப்படி தொடங்கிவைத்தது தனதுபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் கருவியும், நாப்கின்களை எரியுட்டும் கருவியும் பொருத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்காண மாணவிகளும், ஆயிரக்கணக்கான ஆசிரியையும் பயன்பெறுவார்கள்.
இந்த திட்டம் ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசிலும், தற்போது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசிலும் சில அரசு பள்ளிகளில் சோதனை முயற்சியாக கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 300 பள்ளிகளுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், “ மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் அளிப்பது என்பது, மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் சுகாதாரமா இருப்பது தொடர்பாக நடக்கும் விவாதத்தை இயல்புக்கு கொண்டு வரும் முயற்சியாகும்.
மாதவிலக்கு நேர சுத்தம் என்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. இதுபோன்ற முன்னெடுப்புகள், நமது பெண்கள், குழந்தைகள் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை வாழ வழிவகுக்கும் என்று அரசு நம்புகிறது.
இந்த ஷீ-பேட் திட்டத்தின் நோக்கம் பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் சுத்தமாக இருக்க வேண்டிய அவசியத்தையும், விழிப்புணர்வும் ஊட்டுவதாகும். நம் சமூகத்தை சுற்றி இருக்கும் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிய வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 30 கோடியாகும். இதற்கான செலவை உள்ளூர் பஞ்சாயத்துகளும், மாநில பெண்கள் மேம்பாட்டு கழகமும் பகிர்ந்தளிக்கும்.
கடந்த 2015-16ம் ஆண்டு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, கேரள மாநிலத்தில் 10 பெண்களில் 9 பேர் ஏற்கனவேநாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை தெரிவிக்கிறது.