
தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதைப் போன்று கேரள மாநிலத்திலும், அரசின் எந்தவித நலத்திட்ட உதவிகளையும் பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், கேரள அரசின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகளிர் பாதுகாப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதன்படி, அரசின் எந்தவித நலத்திட்ட நிதி உதவியும் பெறாத பெண்கள் மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுவார்கள்.
இந்தத் திட்டத்தில் பயனாளிகள் 35 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். தற்போது, இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 33 இலட்சம் பெண்கள் பலன் அடைவார்கள் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
தற்போது மாதம் ரூ.1,600 வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு பென்ஷன், இனிமேல் மாதம் ரூ.2,000 ஆக உயர்வு, ஒரு கிலோ நெல்லின் கொள்முதல் விலை ரூ.28.20-ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு விதித்துள்ள நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் மாநிலம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கேரள மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலும், அதைத் தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பெண்களை இலக்காகக் கொண்டு மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்திருப்பது, தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.