
கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, தனது மேயர் வேட்பாளராக வி.வி. ராஜேஷை இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
மாநில பாஜக கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொடுங்கனூர் வார்டில் வெற்றி பெற்ற வி.வி. ராஜேஷ் மேயர் வேட்பாளராகவும், கருமம் வார்டில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்ற ஆஷாநாத் ஜி.எஸ். துணை மேயர் வேட்பாளராகவும் களம் இறக்கப்படுகின்றனர்.
கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியும், முன்னாள் காவல்துறைத் தலைமை இயக்குநருமான (DGP) ஆர். ஸ்ரீலேகா மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஸ்ரீலேகாவின் மேயர் பதவி கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேட்பாளர்களை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார். அதில், "திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் இதோ: திரு. வி.வி. ராஜேஷ் மற்றும் திருமதி. ஆஷாநாத்.
இவர்கள் இருவரும் தலைநகர மக்களுக்குச் சேவை செய்வதிலும், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் கட்சித் தொண்டர்கள். 'வளர்ச்சியடைந்த திருவனந்தபுரம்' (Developed Thiruvananthapuram) என்ற இலக்கை நாம் அனைவரும் இணைந்து நனவாக்குவோம். இந்த இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" எனக் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜக 50 இடங்களை வென்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்தது. சுமார் 45 ஆண்டுகால இடதுசாரி கோட்டையைத் தகர்த்து பாஜக அங்கு ஆட்சியைப் பிடிக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள முறைப்படியான மேயர் தேர்தலில் வி.வி. ராஜேஷ் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான வி.வி. ராஜேஷ் ஏற்கனவே பாஜகவின் மாவட்டத் தலைவராகவும், யுவ மோர்ச்சா மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.