கச்சத்தீவு விஷயத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பறித்துள்ளது: விஹெச்பி குற்றச்சாட்டு!!

By Asianet Tamil  |  First Published Apr 4, 2024, 3:01 PM IST

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி வியூக ரீதியாகவும் கச்சத்தீவை இந்தியாவில் இருந்து பிரித்ததுடன் நாட்டின் ஒருமைப்பாட்டையும் காங்கிரஸ் பறித்துள்ளது என்று விஷ்வ இந்து பரிஷத் குற்றம்சாட்டியுள்ளது.  


நாடு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் கச்சத்தீவு பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது. தேசிய அளவில் இந்தப் பிரச்சனை விவாதமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் விஷ்வ இந்து பரிஷத் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ''வியூக ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் முக்கியமான கச்சத்தீவை  இந்தியாவில் இருந்து காங்கிரஸ் துண்டித்துள்ளது மட்டுமின்றி, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பலமுறை பறித்துள்ளது. 

''வரவிருக்கும் பொதுத் தேர்தலில், தேசபக்தி கொண்ட மக்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக பரிசளிக்கப்பட்ட கச்சத்தீவை மீட்கும் பலம் கொண்ட ஆட்சி மத்தியில் அமைவதற்கு வாக்களிப்பார்கள். தேர்வு செய்வார்கள் என்று விஹெச்பியின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன் கடல் மற்றும் வான்வெளி பரப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நிலம், கடல், காற்று பகுதிகளை ஆக்கிரமிப்பவர்களிடம் இருந்து பறித்து நமது தேசத்தின் உறுதியை நிறைவேற்றுவார்கள்.

Tap to resize

Latest Videos

கச்சத்தீவு வரலாற்று ரீதியாக நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்ததாக சுரேந்திரன் ஜெயின் குறிப்பிட்டுள்ளார். அதை இலங்கையிடம் ஒப்படைக்க மறைந்த பிரதமர் இந்திரா காந்தி எடுத்த முடிவு தன்னிச்சையானது. அரசியலமைப்புக்கு எதிரானது. இது நாட்டின்  இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் இழைக்கும் துரோகம் மட்டுமின்றி நாடாளுமன்றம், தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் அங்குள்ள லட்சக்கணக்கான மீனவர்களுக்கு இழைத்த துரோகமாகும். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது அன்றைய காங்கிரஸ் அரசுகள்  அலட்சியத்துடன் நடந்து கொண்டு இருப்பதை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திரா காந்தியின் அரசு, ஜூன் 26, 1974 அன்று, பாக் ஜலசந்தியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தார் என்று டாக்டர் ஜெயின் தெரிவித்துள்ளார். 1956 முதல் 1974 வரை இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை ஊடுருவல், அத்துமீறல்கள், இந்திய மீனவர்களுக்கு எதிரான   அவலங்கள் குறித்துப் பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டன. அன்றைய பிரதமர்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. 

தமிழ்நாடு சட்டமன்றம் கூட காங்கிரஸ் அரசின் சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி பல தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் அவை அனைத்துக்கும் செவி சாய்க்கப்படவில்லை. இந்த தன்னிச்சையான முடிவு முற்றிலும் அரசியலமைப்பிற்கு முரணானது. ஏனென்றால், உச்ச நீதிமன்றம் தனது பெருபாரி வழக்கில் (1960 ) தெளிவாகக் கூறியது. 

இந்தியா எந்த ஒப்பந்தத்தின் கீழ் எந்தப் பகுதியையும் கொடுக்க வேண்டும் என்றாலும், அதன் இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திற்குத்தான் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. உச்ச நீதிமன்றமும் எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அவசியத்தை ஒப்புக்கொண்டது. குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு நில மாற்றமும் அவர்களின் அனுமதியுடன் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்து காங்கிரஸ் அரசுகள் எப்போதும் மெத்தனமாக இருந்து வந்துள்ளன. நமது நாட்டின் காஷ்மீரின் 42,735 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனாவும், 34,639 சதுர கிலோ மீட்டர் பகுதியை பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த சில நாட்களிலேயே கைப்பற்றின.  அதை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க இந்த அரசுகள் தீவிர முயற்சி எடுக்கவில்லை. 

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்து, ஜவஹர்லால் நேரு கூறுகையில், ''இது ஒரு புல் கூட வளராத பிரதேசம். சுமார் 17,000 அடி உயரத்தில் இருக்கும் லடாக் மக்கள் வாழத் தகுதியற்ற நிலம். அது எங்கிருக்கிறது என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை'' என்று கிண்டலாக தெரிவித்து இருந்தார். 

இதற்கு ராஜ்யசபாவில் பதிலளித்து இருந்த பாய் மகாவீர் தியாகி கோபத்துடன் தனது மொட்டைத் தலையை சுட்டிக்காட்டி, ''எனக்கு வழுக்கை, அப்படியென்றால் நான் என் தலையை விட்டுவிடுவதா?'' என்று கேள்வி எழுப்பினார். சீனா சட்ட விரோதமாக திபெத்தை ஆக்கிரமித்தபோதும் நேரு இதேபோன்ற உணர்வற்ற தன்மையை கொண்டு இருந்தார். 

விஸ்வ ஹிந்து பரிஷத் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறது:

1. இந்தியாவின் இறையாண்மை மீது ஏன் இவ்வளவு அலட்சியம்?

2. கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதன் மூலம் நாட்டின் எந்த தேசிய நலன்கள் நிறைவேற்றப்படுகின்றன?

3. பாராளுமன்றம் ஏன் ஏமாற்றப்பட்டது? இந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் ஏன் விவாதிக்கப்படவில்லை?

4. தமிழகத்தின் லட்சக்கணக்கான மீனவர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக பலமுறை உறுதிமொழி அளித்தும் அந்த அரசுகள் என்ன செய்தன?

காங்கிரஸ் அரசாங்கங்கள் எப்போதும் தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக தேசிய நலன்களை குறைத்து மதிப்பிட்டுள்ளன என்பதை விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டறிந்துள்ளது. கச்சத்தீவை மீட்பது மட்டுமின்றி, பறிக்கப்பட்ட நமது அனைத்துப் பகுதிகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தேசிய உறுதியை நிறைவேற்றும் அரசு வரும் தேர்தலில் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று விஎச்பி நம்பிக்கை தெரிவித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!