
காஷ்மீரை மிரட்டும் பனிப் பொழிவு… தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆவது வீரரும் பலி...
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மேலும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
Gurez பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ முகாம் கடும் பாதிப்புக்குள்ளானது.
பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் 4 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதேபோன்று Sonmarg என்னும் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் கடந்த 3 நாட்களில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று ஸ்ரீ்நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், கண்ணந்தங்குடி கீழையூர் இளவரசன் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம், பல்லக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி ஆகியோரின் உடல் இன்று இரவு அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.
Anantnag மாவட்டத்தில் உள்ள Aru பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் பள்ளதாக்கின் மலைப்பாங்கான பகுதிகளில் புதிய பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
சிம்லாவில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக 4 கிராமங்களை இனைக்கும் பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் ஊருக்குள் வர முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.