
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது பாகிஸ்தான் நம்பிக்கை இழந்துள்ளது என்று ஜம்மு- காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்தார். ஜம்முவில் நடந்த ஒரு கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து எல்லையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்வேறு நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
அந்த முகாம்களில் உணவு, குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக எல்லை தாண்டி நடத்தப்படும் தாக்குதல்களால் எல்லையையொட்டி வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
ஒருவேளை, பாகிஸ்தானின் தாக்குதல்கள் அதிகரித்தாலும் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
உரி தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் அதிரடித் தாக்குதலை நடத்தியிருந்தனர். அதன்பிறகு, பாகிஸ்தான் தற்போது நம்பிக்கை இழந்துள்ளது.
எனவே, பாகிஸ்தான் ராணுவத்தினரால் தற்போது எல்லை தாண்டி நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது என்றார்.