எந்த மொழியையும் திணிக்க கூடாது.. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு..

By Thanalakshmi VFirst Published May 28, 2022, 9:51 PM IST
Highlights

பிற மொழிகளை மக்களிடம் திணிக்க கூடாது என்றும் நான் எந்த மொழிக்கும் எதிரானவன் இல்லை என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
 

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடந்த சிலை திறப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில்,” முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என் இளம் வயதில் கருணாநிதியின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். மேலும் நாட்டில் மிக சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர்.

இந்தியாவில் ஆற்றல் வாய்ந்தவர்களில் முதன்மையானவர் அடித்தட்டு மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டவர் . மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். பன்முகதன்மை, அர்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர். என்னுடைய பொதுவாழ்வில் கலைஞர் கருணாநிதியுடனான உறவு மறக்க முடியாத இனிமையானது. கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத்திற்காக வாதாடினேன்.

சமூக நீதிக்காக பாடுபட்டவர். கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர் . மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர். எனது மாணவர் பருவத்தில் இருந்தே அண்ணா, கருணாநிதியின் பேச்சை கேட்டுள்ளேன். நான் அவருடன் கலந்துரையாடி இருக்கிறேன். கருணாநிதியின் சிந்தனையால் இளம் வயதிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

சொலல் வல்லன் சோர்விலன் அவனை
இகழ்வெல்லல் யாருக்கும் அரிது - என்று குறளுக்கு பொருத்தமானவர் கலைஞர் கருணாநிதி.  மக்களின் முன்னேற்த்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்ளை கொண்டுவந்தவர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் சிறப்பு. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைவரும் தாய்நாடு , தாய்மொழியை போற்ற வேண்டும். எங்கு சென்றாலும் பிறந்த ஊரையும், தாய்மொழியையும் யாரும் மறக்கக்கூடாது.

நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. எனது மொழிக்கு ஆதரவானவன். தாய் மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். மத்திய, மாநில அரசு இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது. எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது. நீங்கள் இந்தியாவின் சக்தி வாய்ந்த முதல்வர்களில் ஒருவர் இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி என்று கூறி  பேச்சை முடித்தார்.

மேலும் படிக்க: ”இந்தி திணிப்பை எதிர்ப்போம்”.. கலைஞர் சிலையின் கீழ் பொறிக்கப்பட்ட ”5 கட்டளைகளின் ஹைலைட்”

click me!