
டெல்லி குளிர் இன்று மற்றவர்களுக்கு நடுக்கம் தருகையில்ல் தி.மு.க.வுக்கு மட்டும் நெருப்பாய் தகிக்கிறது. காரணம் இன்னும் சில நிமிடங்களில் அக்கட்சியின் வரலாற்றை திருத்தி எழுத சாத்தியமாக இருக்கின்ற ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகள் என சி.பி.ஐ.யால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி, சரத் ஆகியோ பாட்டியாலா நீதிமன்றத்துக்குள் 9;45 மணி போல் அடுத்தடுத்து நுழைந்து ஆஜராகிவிட்டார்கள்.
தி.மு.க.வின் மகளிரணி மாநில செயலாளராக இருப்பதால் அவருக்கு அரசியல் பூஸ்டை கொடுக்கும் வகையில் அக்கட்சியின் முக்கிய பெண் நிர்வாகிகள் அங்கு அவரோடு சென்றிருக்கிறார்கள் காரை விட்டு இறங்கி நீதிமன்ற வளாகம் செல்லும் கனிமொழியுடன் முன்னாள் தி.மு.க. அமைச்சர் தமிழரசி, மாஜி எம்.பி. ஹெலென் டேவிட்சன் உள்ளிட்டோர் மீடியா நபர்களின் நெருக்கடியை தாண்டி அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். கனிமொழியோடு அவரது கணவரும் வந்திருக்கிறார்.
மகளுக்கு என்ன தீர்ப்பு வருமோ? எனும் பதைபதைப்பில் ராஜாத்தியம்மாளும் இப்போது பாட்டியாலா நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார். நடக்கமுடியாமல் சிரமப்பட்டு நடக்கும் அவரை திண்டுக்கல் நூர்ஜஹான் உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் அழைத்து சென்றிருக்கின்றனர்.
ஆ.ராசா வழக்கமான வேக நடை போட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்தார். அவரிடம் மைக்கை நீட்டிய மீடியாவிடம் ஒரு கோப பார்வை உதிர்த்துவிட்டு உள்ளே சென்றார்.
கலைஞர் டி.வி.யின் முன்னாள் அதிகாரி சரத், ஸ்வெட்டர் ஒன்றை கையில் தூக்கியபடி துள்ளலாக நீதிமன்றத்தினுள் நுழைந்துவிட்டார்.
தலைநகரில் தனது கட்சியை மையப்படுத்தியும், தனது செல்ல மகளை சுற்றியும் தீர்ப்பு மேகம் புதிராய் சூழ்ந்து நிற்க, சென்னை கோபாலபுரத்தில் தனது உதவியாளர் சத்யாவின் உதவியோடு விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு என்ன சொல்லப்போகிறது!?