காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு: உச்ச நீதிமன்றம் செல்லும் கர்நாடக அரசு!

By Manikanda Prabu  |  First Published Sep 27, 2023, 2:12 PM IST

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது


தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பாக பிரச்சினை அதிகரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரை கர்நாடகா முறையாக திறக்கவில்லை. அக்டோபரில் திறக்க வேண்டிய 20.22 டிஎம்சி நீர் தவிர, 50 டிஎம்சி நீர் திறக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

ஆனால், கர்நாடக அரசோ தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று விடாப்படியாக உள்ளது. அப்படியே திறந்தாலும், குறைந்த அளவிலேயே திறக்க முடியும் என அம்மாநில அரசு கூறுகிறது. இதனிடையே, டெல்லியில் கடந்த 12ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது.  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Latest Videos

undefined

உலகப் பொருளாதார சக்தியாகும் இந்தியா: பிரதமர் மோடி நம்பிக்கை!

இதற்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனை கண்டித்து கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதேசமயம், காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டமும்  நேற்று நடைபெற்றது. அதில், தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் இருந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். “கர்நாடகா அணைகளில் தமிழகத்திற்கு வழங்க தண்ணீர் இல்லை. இதுகுறித்து, மாநில வழக்கறிஞர் குழுவுடன் நான் பேசினேன். தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.” என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

click me!