
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மாதல் விருபாக்ஷப்பாவுக்கு மிகப்பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அவர் மீதான ஊழல் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாதல் விருபாக்ஷப்பாவுக்கு எதிராக ஊழல் செய்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளமுடியாது என நீதிபதி எம் நாகபிரசன்னா தெரிவித்துள்ளார்.
வழக்கில் உள்ள அவதானிப்புகள் அனைத்தும் ஏ1 என குற்றம் சாட்டப்பட்ட மாதல் விருபாக்ஷப்பா மீது மட்டுமே உள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரணை அல்லது நிலுவையில் உள்ள எந்தவொரு நடவடிக்கையையோ விசாரணையோ இல்லை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் தலைவராக இருந்தவர் மாதல் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் இந்த வழக்கில் ஏ2 என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் லஞ்சம் பெற்றதாக கூறி கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி லோக்ஆயுக்தா போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் நிதி ஆலோசகராகவும், தலைமை கணக்கு அதிகாரியாகவும் பணிபுரியும் பிரசாந்த், கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிட்டெடில் பணிகளுக்கான பணத்தை விடுவிப்பதற்கும் அல்லது குறிப்பிட்ட வகையில் டெண்டரை இயக்குவதற்கு லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதன்படி, மார்ச் 2, 2023 அன்று ரூ.40 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாக பிரசாந்தை கையும் களவுமாக லோக் ஆயுக்தா போலீஸார் கைது செய்தனர். தனது தந்தையின் அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்தி அவருக்கு பதிலாக பிரசாந்த் லஞ்சம் பெற்றதாக போலீசார் குற்றம் சாட்டினர்.
அதன் தொடர்ச்சியாக, அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ.7 கோடி கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. சோதனையின்போது, கட்டுக்கட்டான பணம் கைப்பற்றப்பட்ட வீடியோவும் வெளியாகி வைரலானது.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் லோக் ஆயுக்தா சோதனை!
விருபாக்ஷப்பாவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7-வது பிரிவானது அரசு ஊழியர் ஒருவர் கடமையை செய்ய சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை குறிப்பிடுகிறது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆனால், இது நிரூபிக்கப்படவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான புகார் தெளிவின்மையாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரசாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது ரூ.6.1 கோடி ரொக்கம் கிடைத்தாலும், மனுதாரருக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட வில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.