ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை செய்ய அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதனிடையே, கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
undefined
ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக தினத்தன்று, அந்தந்த கிராமங்கள், உள்ளாட்சிகள், கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கும்பாபிஷேக விழாவுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய எல்.இ.டி திரைகளில் கும்பாபிஷேக விழாவை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை செய்ய அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நேரமான மதியம் 12.29 முதல் 12.30 மணி வரை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மகா மங்கள ஆராத்தி பூஜை நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை (முஸ்ராய்) அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். “அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவப்படும் ஜனவரி 22 அன்று மாநிலத்தின் அனைத்து அறநிலையத்துறை கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்ய நான் அறிவுறுத்தியுள்ளேன்.” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, “ராமர் கோயில் இயக்கத்துக்கு எதிரானதாக அறியப்பட்ட கர்நாடக காங்கிரஸ் இறுதியாக கடவுள் ராமரின் மீது கன்னடர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பக்தியையும் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் சிறப்பு பூஜைகளை நடத்த அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவர வழக்கில் இந்துத்துவா செயற்பாட்டாளர் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக கடந்த வாரம் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவை அம்மாநில காங்கிரஸ் அரசு பிறப்பித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு 20 வயது. தற்போது அவருக்கு வயது 50. அப்போது நடைபெற்ற கலவரத்தில் ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு தொடர்பிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளி போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!
கும்பாபிஷேக விழாவுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கு அயோத்தி ராமர் கோவில் கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளார். ஆனால், விழாவில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஒரு சாரார் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மற்றொரு சாரார் விழாவில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. இரண்டுமே தேர்தல் அரசியலை மனதில் வைத்துதான் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுகுறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “எனக்கோ, முதல்வருக்கோ அழைப்பு வரவில்லை. ஆனால், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைக்கப்பட்டுள்ளார். விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி முடிவெடுக்கும்.” என்றார்.
அதேசமயம், தன்னை ஒரு ராம பக்தராகவும் டி.கே.சிவக்குமார் முன்னிறுத்திக் கொண்டார். “நான் ஒரு இந்து; நான் ஒரு ராம பக்தன்; நான் ஒரு அனுமன் பக்தன். நாங்கள் அனைவரும் இங்கிருந்து பிரார்த்தனை செய்கிறோம். அது நமக்குள்ளும், நம் இதயத்திலும் உள்ளது. இங்கு அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை.” என்று அவர் கூறினார்.
துணை முதல்வரே தன்னை ஒரு ராம பக்தனாக காட்டிக் கொள்ளும் போது, ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை செய்ய அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என கூறுகிறார்கள்.