Karnataka Election Results 2023: இலவசங்களை அறிவித்த கட்சிகள்; புறம் தள்ளப்பட்ட ஊழல்; விஐபிக்கள் தப்புவார்களா?

By Dhanalakshmi G  |  First Published May 12, 2023, 3:14 PM IST

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ஆம் தேதி முடிவடைந்தது. நாளை முடிவு வெளியாகிறது.


முன்னதாக தேர்தலுக்கு முன்பு முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு களத்தில் இருந்த சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு கட்சிகள் கையாண்டன? மாநிலத்தின் ஊழல் மக்களின் மனநிலையை மாற்றியதா அல்லது புறந்தள்ளினார்களா? அல்லது இறுதிக்கட்ட நிகழ்வுகள் மாற்றியதா? போன்ற பல்வேறு கேள்விகள் மனதில் எழுகின்றன. பெரிய தலைகள் வென்றார்களா? கட்சி தாவியவர்கள் வென்றார்களா? இவற்றுக்கு எல்லாம் நாளை விடை கிடைக்கப் போகிறது. 

கர்நாடகா மாநிலத்தின் வெற்றி பாஜகவுக்கு முக்கியம். தென்னிந்திய மாநிலங்களில்  கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக ஆட்சியில் இருக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டில் பிஎஸ் எடியூரப்பா தலைமையில் பாஜக முதன் முறையாக கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது. தற்போதும் பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இந்த ஆட்சியின் மீது பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  

Latest Videos

undefined

இந்த தேர்தலின் முடிவு பாஜகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் சவாலாக இருக்கிறது. பாஜக வெற்றி பெற்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய அளவில் உந்து சக்தியாக இருக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால், எதிர்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

73 வயதான மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா? ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி..

ஊழல் குற்றச்சாட்டு:
ஆளும் பாஜக ஆட்சி மீது பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. வெளிப்படையாக பேசப்பட்டது. கான்ட்ராக்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் மத்தியில் இருக்கும் பாஜக அரசையும் சாடுவதாக இருந்தது. இதற்குக் காரணம் மத்தியில் இருக்கும் தலைவர்கள் இரட்டை இஞ்சின் அரசு என்று கூறி வந்தனர். முதல்வர் பசவராஜ் பொம்மையை ''பேசிஎம்'' என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. இவர்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் மாநிலத்தில் நடந்த ஊழல் குறித்து பாஜகவும் எடுத்துரைத்தது.

மோடி - அமித் ஷா கூட்டணி:
கர்நாடகா மாநிலத்தின் வெற்றிக்காக அதிகமாக உழைத்தவர்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்றால் மிகையாகாது. கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலின்போது, இறுதிக் கட்டத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். இது பாஜகவுக்கு அதிக இடங்களை பெற்றுத் தந்தது என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் மோடி அதிகளவில் பிரச்சாரம் மட்டுமின்றி, ரோடு ஷோவும் மேற்கொண்டு இருந்தார். இரட்டை இஞ்சின் அரசு, உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை குறிப்பிட்டு பேசி இருந்தார். தேர்தலுக்கு முன்பு பெங்களூரு - மைசூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை திறந்து வைத்து இருந்தார்.

கர்நாடகாவில் அரியணை ஏறுவது யார்.? ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு

இலவசம்:
பொதுவாக இலவசங்கள் கூடாது என்று கூறும் பாஜக இந்த முறை இலவசங்களை அறிவித்தது. மூன்று இலவச சமையல் சிலிண்டர்கள், இலவசமாக 500 லிட்டர் நந்தினி பால், வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பத்தினருக்கு அடல் திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள், அனைத்து பெண்களுக்கும் இலவச பஸ் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் 2000 ரூபாய் என்று அறிவித்து இருந்தது. காங்கிரஸ் கட்சியோ படித்து வெளியில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாயும், டிப்ளமோ முடித்து வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 1500 ரூபாயும், பத்து கிலோ அரிசியும், மாதம் 200 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தனர். ஜேடிஎஸ் கட்சி இலவசமாக 5 சமையல் சிலிண்டர்களும், மாதம் 2000 ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

மக்கள் இந்த இலவசங்களுக்கு வாக்கு அளிக்கிறார்களா? ஊழலை பின்னுக்கு தள்ளினார்களா? வேலையில்லா திண்டாட்டத்தை பின்னுக்குத் தள்ளினார்களா? என்பது நாளை தேர்தல் முடிவில் வெளியாகிவிடும்.

முஸ்லிம் இட ஒதுக்கீடு:
தேர்தலுக்கு முன்பு பிற தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து ஒக்கலிக்கர் மற்றும் லிங்காயத் சமுதாயத்தினருக்கு பாஜக அளித்தது. இது மாநிலத்தில் பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பி இருந்தது. இறுதியில் இந்த இடஒதுக்கீடு பறிப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. காங்கிரஸ் கட்சியோ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார்.

பஜ்ரங் தளம் தடை:
ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் பஜ்ரங் தளம் தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து இருந்தது. இவர்களது இந்த அறிவிப்பு அந்த மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தலில் பெரிய அளவில் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. பஜ்ரங் தளம் அமைப்பினர் அனுமனை வழிபடுபவர்கள். இவர்கள் இழிவுபடுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் ஆயுதமாக பயன்படுத்தினார். வாக்களிக்கும்போது, ''ஜெய் பஜ்ரங்கி'' என்று கூறிக் கொண்டே வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். மாநிலத்தில் எங்கு பார்த்தாலும், அனுமன் வேடம் அணிந்து பஜ்ரங் தளம் அமைப்பினர் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தனர். இந்த நிலையில், பஜ்ரங் தளம் அமைப்பை மாநில அரசு தடை செய்ய முடியாது என்றும், இந்த அமைப்பை தடை செய்வதற்கு எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி விளக்கம் அளித்தார். ஆனாலும், இந்த சமாதானப் பேச்சு எடுபடவில்லை.

முக்கிய தொகுதிகள்:
வருணா:
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாஜகவில் இருந்து வி. சோமண்ணா போட்டியிடுகிறார். அமைச்சராக இருக்கும் இவர் மாநிலத்தில் செல்வாக்கு மிக்கவர். 

கனகபுரா தொகுதி:
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த செலவாக்கு மிக்க தலைவர். இவரை எதிர்த்து பாஜகவில் இருந்து வருவாய் துறை அமைச்சர் அசோகா போட்டியிடுகிறார். இத்துடன் பத்மநாபநகர் தொகுதியில் இருந்தும் அசோகா போட்டியிடுகிறார்.

ஹூப்ளி - தர்வார்டு சென்ட்ரல்: 
பாஜகவில் இருந்து தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தாவியவர் ஜெகதீஸ் ஷெட்டார். ஆறு முறை எம்எல்ஏவாக இருந்தவர். பாஜகவில் சீட் கொடுக்கவில்லை என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். இவர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரை எதிர்த்து பாஜகவில் இருந்து இந்துத்துவா முகவரியுடன் களத்தில் இறங்கி இருப்பவர் மகேஷ் டெங்கினகை.   

சென்னப்பட்டனம் தொகுதி:
இங்கு கடந்த 2018ஆம் ஆண்டில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவில் இருந்து நடிகராக, ரியல் எஸ்டேட் அதிபராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கும் சிபி யோகேஷ்வரா போட்டியிடுகிறார். 

அதானி தொகுதி:
இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து போட்டியிட்ட லட்சுமண் சாவடி தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் குமதள்ளி போட்டியிட்டு இருந்தார். தற்போது இவரை எதிர்த்து பாஜகவில் இருந்து மகேஷ் குமதள்ளி போட்டியிடுகிறார்.  இந்த தொகுதியில் அதிகளவில் லிங்காயத் சமுதாயத்தினர் உள்ளனர். 

ஷிக்காவன் தொகுதி:
இங்கு காங்கிரஸ் சார்பில் யாசிர் அகமது கான் பதான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார். பசவராஜ் பொம்மை அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் இவர் வெற்றி பெறுவது உறுதி என்றே இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

உடுப்பி:
முக்கியத்துவம் வாய்ந்த உடுப்பி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹிஜாப் விவாதத்தின் போது பிரபலமடைந்த வலுவான இந்துத்துவா வாதியான யஷ்பால் சுவர்ணாவை பாஜக தேர்வு செய்தது. இவரை எதிர்த்து காங்கிரசில் இருந்து பிரசாத்ராஜ் காஞ்சன், ஜேடி(எஸ்) சார்பில் தக்ஷத் ஆர்.ஷெட்டி போட்டியிட்டனர். உடுப்பியில் பிரச்சாரம்பெரிய அளவில் இருந்தது. வெற்றி வாய்ப்பும் சரிசமமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

ஹாசன்:
ஹாசன் தொகுதியில் பாஜக சார்பில் பிரீதம் ஜெ கவுடாவும், காங்கிரஸ் சார்பில் பனவாசி ரங்கசாமியும், ஜேடிஎஸ் சார்பில் ஸ்வரூப் ஹெச் எஸ் பிரகாஷ் போட்டியிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஸ்வரூப் பிரகாஷ் தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிடுகிறார். இங்கு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் பிரகாஷை ப்ரீத்தம் 13,006 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா தேர்தல் முடிவை நாடே உற்று நோக்கி கவனித்து வருகிறது.

click me!