
Karnataka Deputy CM D.K. Shivakumar Explains He Did Not Buy RCB Team: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோக சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநில அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணி உரிமையாளர்களையும், ஆர்சிபி அணியின் விராட் கோலியையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஆர்சிபி அணியை விற்க முடிவு?
மேலும் இந்த விவாரத்துக்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க உயர் அதிகாரிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் தனது பங்குகளில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ விற்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
டியாஜியோ முடிவுக்கு என்ன காரணம்?
ஐபிஎல்லில் மது மற்றும் புகையிலை பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய இந்திய சுகாதார அமைச்சகம் அழுத்தம் கொடுத்தது ஆர்சிபி அணியை விற்க டியாஜியோவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என தகவல்கள் கூறின. மேலும் அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளில் பிரீமியம் மது விற்பனையில் ஏற்பட்ட சரிவு, அந்த நிறுவனத்தை அதன் முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்தத் தூண்டியதாகவும் தகவல் வெளியாகின.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விளக்கம்
ஆனால் டியாஜியோ இதை மறுத்திருந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆர்சிபி அணியை வாங்க இருப்பதாக ஒருபக்கம் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''நான் ஒரு பைத்தியக்காரன் இல்லை. நான் என் சிறு வயதிலிருந்தே கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன், அவ்வளவுதான். நிர்வாகத்தில் சேர எனக்கு வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு நேரமில்லை. எனக்கு ஏன் ஆர்சிபி தேவை? நான் ராயல் சேலஞ்ச் கூட குடிப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.