தெலுங்கானா விரைகிறார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்; மீண்டும் ரெசார்ட் கலாச்சாரம்!!

By Dhanalakshmi G  |  First Published Dec 2, 2023, 12:25 PM IST

தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதி நேரத்தில் கட்சி மாறலாம் என்பதால் அவர்களை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதி நேரத்தில் கட்சி மாறலாம் என்பதால் அவர்களை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது. நவம்பர் 30 ஆம் தேதி நடந்து முடிந்த இந்த தேர்தலில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 221 பெண் வேட்பாளர்கள். மாநிலத்தில் மொத்தமுள்ள 3.17 கோடி வாக்காளர்களில் 63.7% பேர் வாக்களித்து இருந்தனர். 

Tap to resize

Latest Videos

தேர்தலில் மாநிலத்தில் முக்கிய புள்ளிகளாக முதல்வரும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், இவரது மகனும் அமைச்சருமான கேடி ராமா ராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி, மக்களவை பாஜக உறுப்பினர் பண்டி சஞ்சய் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களது வெற்றி, தோல்வி நாளை தெரிய வரும்.

ராஜஸ்தான் எக்ஸிட் போல்: நம்பும் காங்கிரஸ், நம்பாத பாஜக!

முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு தொகுதிகளில் அதாவது கஜ்வேல், கம்மாரெட்டி ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிட்டார். 2018ஆம் ஆண்டில் கஜ்வேல் தொகுதியில் போட்டியிட்டு சந்திரசேகர ராவ் 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இவரது மகன் கேடிஆர் தற்போது சிர்சில்லா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு சுமார் 89,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். கம்மாரெட்டி மற்றும் கோடங்கல் ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இந்த முறை போட்டியிட்டுள்ளார்.  

மொத்தமிருக்கும் 119 சட்டசபை தொகுதிகளில் 2018ஆம் ஆண்டில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று தனியாக ஆட்சி அமைத்து இருந்தது. தொடர்ந்து இரண்டு முறை அந்த மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார். ஆனால், மூன்றாவது முறையாக முதல்வர் ஆவாரா? மாட்டாரா? என்பது நாளை காலை தெரிந்துவிடும். ஆனால், நேற்று வெளியாகி இருக்கும் தேர்தலுக்குப் பிந்தைய இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு முடிவுகள் ராவுக்கு எதிராக அமைந்துள்ளது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது. 

மத்தியப்பிரதேச தேர்தல்: எங்களுக்குத்தான் வெற்றி - அடித்துச் சொல்லும் கமல்நாத், சவுகான்!

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி 36% வாக்குகளுடன் 34 முதல் 44 இடங்களை கைப்பற்றும் என்றும்,  காங்கிரஸ் கட்சி 42% வாக்குகளுடன் 63 முதல் 73 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜக 14% வாக்குகளுடன் 4 முதல் 8 இடங்களை பிடிக்கும் என்றும் மற்றவர்கள் 8% வாக்குகளுடன் 5 முதல் 8 இடங்களை கைப்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த கணிப்புகளை அடுத்து வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்களை சந்திரசேகர ராவ் விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில், முன்னதாக வெற்றி பெறும் வேட்பாளர்களை கர்நாடகாவுக்கு கடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெலுங்கானா செல்கிறார்.

இதை முன்னிட்டு இன்று டிகே சிவகுமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் அணுகியதாக எங்களது வேட்பாளர்கள் எங்களிடம் தெரிவித்து உள்ளனர். எங்களிடம் தகவல் உள்ளது. ஆனால், எங்களது வேட்பாளர்கள் விசுவாசமானவர்கள். நாங்கள் பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி தொடர்பான வேலை எனக்கு இருக்கிறது. எனவே, நான் அங்கு செல்கிறேன். கர்நாடகா தேர்தல் நடந்தபோது, தெலுங்கானா  காங்கிரஸ் குழு எங்களுடன் இருந்தது. அதனால், நானும் அங்கே செல்கிறேன். தேர்தல் முடிவுக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, மிரட்டலும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு மாறாக, பாரத் ராஷ்டிரிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு தயாராக இருப்பதாகவும், தன்னை அணுகி பேசியதாகவும் மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்து இருந்த ரேணுகா சவுத்ரி, ''கடந்த முறை எங்களது 12 எம்எல்ஏக்களை பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தங்கள் பக்கம் இழுத்து இருந்தனர். இந்த முறை அந்தக் கட்சி தலைவர்கள் எங்களை அணுகி வருகின்றனர். அதனால், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிதான் இந்த முறை கவனமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு முன்னதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவாமல் இருக்க அவர்களை பெங்களூருவுக்கு கடத்திச் சென்று டிகே சிவகுமார் பாதுகாத்து வந்துள்ளார். இந்த முறையும் தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இறுதி நேரத்தில் கட்சி தாவாமல் இருப்பதற்காக டிகே சிவகுமார் செல்கிறார் என்று பரவலாக பேசப்படுகிறது. ''ரெசார்ட் கலாச்சார அரசியல்'' என்றாலே நினைவுக்கு வருபவர் டிகே சிவகுமார்தான்.

click me!