எங்களுக்கும் ஆபரேஷன் பண்ண தெரியும்... 10 ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக பாஜகவுக்கு குமாரசாமி ஷாக்!

By Asianet TamilFirst Published Apr 24, 2019, 8:49 AM IST
Highlights

கூட்டணி கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம்  என்று பாஜக நினைத்துவருகிறது. அப்படிச் செய்தால், நாங்கள் என்ன வேடிக்கை பார்த்து கொண்டிருப்போமா? பாஜவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எங்களோடு தொடர்பில் இருந்துவருகிறார்கள். பாஜக என்ன செய்ய நினைக்கிறதோ அதை நாங்களும் செய்ய ரொம்ப நேரம்  ஆகாது.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்க்க படாதபாடுபட்டுகொண்டிருக்கும் பாஜக தரப்பிலிருந்து 10 பேர் எங்களுடன் தொடர்பில் இருப்பதாக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதத்தில் காங்கிரஸ் -மஜத கூட்டணி அரசு பதவியேற்றது. முதல்வராக குமாரசாமி இருந்துவருகிறார். புதிய அரசு அமைந்ததிலிருந்து அந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக பகிரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீசுவது, அவர்களை தங்களோடு வைத்துக்கொண்டு அரசுக்குக் குடைச்சல் கொடுப்பது என எல்லா வேலைகளையும் செய்துவருகிறது. இதற்கு ஆபரேஷன் தாமரை, ஆபரேஷன் கமலா என விதவிதமாகப் பெயர்களைச் சூட்டி கர்நாடக பாஜக ஆளுங்கட்சியை மிரட்டிவருகிறது.
இந்நிலையில் பாஜவுக்கு மட்டும்தான் ஆபரேஷன் கமலா செய்யத் தெரியுமா? எங்களுடன் 10 பாஜ எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர் என்று முதல்வர் குமாரசாமி பாஜகவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் குமாரசாமி. கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்துவரும் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி பாஜவில் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில் குமாரசாமி இதைத் தெரிவித்தார்.
 “நாடாளுமன்றத்  தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி ஆட்சி கவிழும்; புதிய முதல்வராக  எடியூரப்பா பதவியேற்பார் என்றும் பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் சக்தி யாருக்குமே இல்லை.

 
கூட்டணி கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம்  என்று பாஜக நினைத்துவருகிறது. அப்படிச் செய்தால், நாங்கள் என்ன வேடிக்கை பார்த்து கொண்டிருப்போமா? பாஜவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எங்களோடு தொடர்பில் இருந்துவருகிறார்கள். பாஜக என்ன செய்ய நினைக்கிறதோ அதை நாங்களும் செய்ய ரொம்ப நேரம்  ஆகாது.” என்று குமாரசாமி பாஜகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

click me!