
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கன்னூலி சுங்கச்சாவடியில் (Kannooli toll gate), கட்டணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் உள்ளூர் பாஜக தலைவரும் பாபலேஷ்வர் தொகுதியின் முன்னாள் வேட்பாளருமான விஜுகவுடா பாட்டீலின் (Vijugowda Patil) மகன் சமர்த் கவுடா பாட்டீல் (Samarth Gowda Patil) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளில், ஒரு கார் சுங்கச்சாவடியில் நிற்பதும், அதில் இருந்து இறங்கிய சமர்த், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது. சுங்கச்சாவடி ஊழியர்களின் கூற்றுப்படி, சமர்த், தன்னை பாஜக தலைவர் விஜுகவுடா பாட்டீலின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது வாகனத்துக்குக் கட்டணம் இல்லாமல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
சமர்த், ஊழியர்களிடம், "நான் யார் என்று தெரியுமா? நான் பாஜக தலைவர் விஜுகவுடா பாட்டீலின் மகன்," என்று கூறியிருக்கிறார். அதற்கு ஒரு ஊழியர், "எந்த விஜுகவுடா?" என்று பதிலளித்ததையடுத்து, இந்த வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது. சமர்த் காரில் இருந்து வெளியே வந்து, ஊழியர் ஒருவரைத் தள்ளி, தாக்கிய காட்சிகள் சிசிடிவில் பதிவுகளில் தெரிகிறது. வாகனத்தில் இருந்த மற்றொருவரும் தாக்குதலில் ஈடுபட, மற்ற ஊழியர்கள் தலையிட்டு தடுக்க முயல்வதையும் சிசிடிவி காட்சிகளில் காணமுடிகிறது.
தாக்குதலில் காயமடைந்த ஊழியர் சங்கப்பா (Sangappa), சிந்தகி தாலுகா மருத்துவமனையில் (Sindagi Taluk Hospital) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யவில்லை. சுங்கச்சாவடி ஊழியர்களிடம் புகார் அளிக்கக் காவல்துறை வற்புறுத்தியபோதிலும், அவர்கள் மறுத்துவிட்டதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "இத்தகைய தொல்லைகள் எங்களுக்கு அடிக்கடி நேர்கின்றன. ஒவ்வொன்றுக்கும் புகார் அளித்துக்கொண்டிருக்க முடியாது," என ஊழியர்கள் கூறியதாகத் தெரிகிறது.
முறையான புகார் இல்லாமல் தங்களால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியாது என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர் விஜுகவுடா பாட்டீல், சம்பவம் நடந்தபோது தான் ஊரில் இல்லை என்றும், பின்னர் தான் அறிந்துகொண்டதாகவும் கூறினார்.
"சுங்கச்சாவடியில், இது யாருடைய வாகனம் என்று கேட்டபோது, என் மகன் அது விஜுகவுடாவின் கார் என்று மரியாதையுடன் தான் கூறியுள்ளார். அதற்கு ஊழியர், 'எந்த விஜுகவுடா?' என்று ஒருமையில் பேசி, யாராக இருந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு தந்தையைப் பற்றி அவர் மகனின் முன்னால் அவமரியாதையாகப் பேசும்போது, கோபம் வருவது இயல்பு," என்று பாட்டீல் கூறினார்.
மேலும், "இது போன்ற ஒரு சிறிய சம்பவத்திற்காக, வழக்குப் பதிவு செய்து அரசியலாக்க முயல்கிறார்கள். அவன் என்ன கொலை செய்துவிட்டானா அல்லது கொள்ளை அடித்துவிட்டானா? என் மகன் பேசியது தவறாக இருந்தாலோ, அவன் செய்தது தவறாக இருந்தாலோ நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.