பெங்களூருவில் டவுன் ஹாலில் போராட்டம் நடத்த முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டவுன் ஹாலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் MES அமைப்பிற்கு எதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
கர்நாடாக மாநிலத்தில் இன்று (சனிக்கிழமை) மாநிலம் தழுவிய 12 மணிநேர பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன் ஹாலில் பேரணி நடத்த முயன்ற 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேரண நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜாஜிநகர் மெட்ரோ நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களும் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை அரசுப் பேருந்தில் ஏற்றி ஃப்ரீடம் பார்க்கிற்கு அழைத்துச் சென்றனர். ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழுக்களாக டவுன் ஹாலுக்கு வந்தனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பும் ஹனி டிராப் சர்ச்சை; நடந்தது என்ன?
வெள்ளிக்கிழமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேரணிகள் ஏதேனும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா எச்சரித்திருந்தார். இருப்பினும், பந்த் அழைப்பு விடுத்த வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் டவுன் ஹாலில் இருந்து பேரணியைத் தொடங்கினார்.
ஃப்ரீடம் பார்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தை விமர்சித்து கோஷமிட்டனர். "அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை மகாராஷ்டிர MES அமைப்பின் உறுப்பினர்கள் தாக்கினர், ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். இது கோழைத்தனம். நாங்கள் போராடுவதையும் தடுக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று போராட்டக்காரர்களில் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஃப்ரீடம் பார்க் பகுதியில் மற்றொரு போராட்டக் குழுவினர் "MES" என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்திற்கு "இறுதி சடங்கு" செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் சில கன்னட அமைப்பினர் பேருந்துகளை வழிமறித்து, பேருந்து கண்ணாடிகளில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை ஸ்பிரே செய்தனர்.
காலையில் 10க்கும் மேற்பட்டோர் ராஜாஜிநகர் மெட்ரோ நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு அனைத்து போராட்டக்காரர்களையும் கைது செய்தனர். இதுவரை, பெரிய அளவிலான சம்பவங்கள் எதுவும் இல்லாமல் பந்த் அமைதியாக நடந்து வருகிறது.
வாட்டாள் நாகராஜ் பந்த் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து உள்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். அனைத்து ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களும் விழிப்புடன் இருக்கவும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
"சட்டத்தை மீறும் எவரையும் கைது செய்ய காவல் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். தற்போது வரை, பந்த் அமைதியாக நடந்து வருவதாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன" என்று பரமேஸ்வரா கூறினார்.
ஏப்ரல் 1 முதல் UPI ஐடி வேலை செய்யாது! கூகுள் பே பயனர்கள் நோட் பண்ணுங்க!