Explainer:கர்நாடகா சட்டசபை தேர்லில் கட்சிகள் எதிர்கொண்டு இருக்கும் பிரச்சனைகளும்; பாஜகவின் ஸ்டார் வேட்பாளரும்!

By Dhanalakshmi G  |  First Published Apr 4, 2023, 2:13 PM IST

கர்நாடகா சட்டசபை தேர்தல் மும்முனைப் போட்டியாக களம் காண இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக கர்நாடகாவில் மும்முனைப்போடி நிலவி வந்துள்ளது.


கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையேதான் போட்டி நிலவ இருக்கிறது. இந்த முறை எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு அதிக இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்து இருந்தது. 

2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. இந்தக் கட்சியுடன் இணைந்து ஆட்சியையும் அமைத்தது. ஆனால், ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு கட்சிகளையும் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் பாஜகவுடன் இணைந்து ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாஜகவில் இணைந்தனர். பாஜக ஆட்சி அமைத்தது.

Latest Videos

அந்த தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. காங்கிரசுக்கு 38 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 36 சதவீத வாக்குகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 18 சதவீத வாக்குகளுக்கும் அந்த தேர்தலில் கிடைத்து இருந்தது.  

இந்த முறை நடக்கும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டும் சம பலத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஆட்சி அமைக்கும்போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் இந்த முறை முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலில் போட்டியிடுகின்றன. 

முதன் முறையாக பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே களத்தில் நிற்கிறது. கர்நாடகாவில் கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து பாஜகவின் முகமாக இருந்தவர் பிஎஸ் எடியூரப்பா. இவர் சமீபத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். தற்போது பாஜகவுக்கு அந்த மாநிலத்தில் பிரபல அரசியல்வாதி என்று கூறிக் கொள்வதற்கு யாரும் இல்லை. பிரதமர் மோடிதான் ஸ்டார் முகமாக களத்தில் இருக்கிறார். கர்நாடகா மாநிலத்திற்கு மோடி செல்லும் போதெல்லாம் பெரிய அளவில் மக்களின் வரவேற்பு காணப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாஜக மீது பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதை முறியடிக்கும் விதமாக, மத்தியில், மாநிலத்தில் என இரட்டை இஞ்சின் என்ற வசீகர மந்திரத்தை கூறி பாஜக வாக்காளர்களை ஈர்த்து வருகிறது. இத்துடன் இல்லாமல், முக்கிய சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் வகையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்து மக்களின் வாக்குகளைப் பெறும் வகையில் இந்துத்துவா பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கேற்றார் போல இந்துக் கடவுள்கள் மற்றும் வரலாற்றில் இடம் பிடித்த முக்கிய நபர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் பொதுவாக சமூகத்தின் வாக்குகள்தான் ஆட்சியை தீர்மானம் செய்துள்ளன. குறிப்பாக லிங்காயத்து சமூகம் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து பாஜகவை ஆதரித்து வந்துள்ளது. இவர்கள் அதிகமாக வடமாவட்டங்களில் பரவி இருக்கின்றனர். மற்றொரு முக்கிய சமூகத்தினரான ஒக்கலிக்கர்  எப்போதும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆதரித்து வந்துள்ளனர். இவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பாஜகவும், காங்கிரசும் இந்த முறை முயற்சித்து வருகிறது. 

காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சி கடந்த முறை 38 சதவீத வாக்குகளை பெற்று, 80 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இந்த முறை பாஜக அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள் மற்றும் அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் நம்புகிறது. கடந்த 2018ஆம் ஆண்டிலும் ராகுல் காந்திதான் கர்நாடகா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார். தற்போதும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். கோலார் தங்க வயலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்குவார் என்று கூறப்படுகிறது. 124 வேட்பாளர்களின் முதல் பட்டியலை முந்திக் கொண்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

ஜேடி(எஸ்)
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.  குறைந்தது 25 முதல் 35 இடங்களை பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்சிக்கு மாண்டியாவில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. முன்பு காங்கிரஸ், பாஜக இரண்டுடனும் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. இந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாரசாமி வடக்கு கர்நாடகாவுக்கு சமீபத்தில் சென்று இருந்தபோது பெரிய அளவில் இவருக்கு ஆதரவு காணப்பட்டது. மேலும் இந்தக் கட்சிக்கு தெற்கில் ஒக்கலிக்கர் சமூகத்தினரின் ஆதரவும் அதிகமாக இருக்கிறது. 

தொடர்ந்து இங்கு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பலத்தை கொடுக்காது என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும், ஹெச்டி குமாரசாமி மற்றும் இவரது சகோதரர் ஹெச்டி ரேவண்ணா இருவருக்கும் சீட் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுவும் குடும்ப பிரச்சனையாக உருவெடுத்து இருப்பதால் ஹசன் பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு சறுக்கலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கியப் புள்ளிகள்:
கர்நாடகா மாநிலத்திற்கு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி ஆறு முறை வந்து இருக்கிறார். ரோடு ஷோவிலும் கலந்து கொண்டுள்ளார். அமித் ஷாவும் தொடர்ந்து வந்திருந்து கட்சி முக்கியப் புள்ளிகளை சந்தித்து தேர்தல் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

Watch : அதானி ஷெல் நிறுவனங்களின் ரூ.20,000 கோடி பணம் யாருடையது? - ராகுல்காந்தி காட்டமான கேள்வி!

பிஎஸ் எடியூரப்பா & பசவராஜ் பொம்மை:

முதல்வர் பொம்மையும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் லிங்காயத் வாக்குகளை சேகரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று கருதப்படுகிறது. இதனால் தான் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்த எடியூரப்பாவுக்கு நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர்தான் அந்த மாநிலத்தின் பிரபல பாஜக தலைவராக இன்றும் திகழ்ந்து வருகிறார். பொம்மை முதல்வராக இருந்தாலும், எடியூரப்பா அளவிற்கு பெயரும், புகழும் அடையவில்லை. எடியூராப்பவுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுத்தால்தான் லிங்காயத் மற்றும் தலித் பிரிவில் சிலரது வாக்குகளை பெற முடியும் என்பது பாஜகவின் கணக்காக இருக்கிறது. இந்துக்களையும் ஒன்றிணைக்க முடியும்.

சித்தராமையா & டிகே சிவகுமார்
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், சித்தராமையா அல்லது சிவகுமாருக்குத் தான் முதல்வர் வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குள் இருந்த பிரச்சனைகளை ராகுல் காந்தி கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தபோது தீர்த்து வைத்தார். ஆனாலும், இவர்களுக்குள் புகைச்சல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சித்தராமையாவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறதோ அதே செல்வாக்கு சிவகுமாருக்கும் இருக்கிறது. குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமையா. சிறுபான்மையினர், தலித், பிற்படுத்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்த குழுவில் இவரது குருபா சமூகமும் இடம் பெற்றுள்ளது. இவர்களது வாக்குகள் தான் இவரை இதுவரை முதல்வராக வைத்து இருந்தது. சிவகுமார் ஒக்கலிக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். பழைய மைசூர் பகுதியில் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது. இங்கு இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். 

கர்நாடகா மாநிலத்தில் ஒக்கலிக்கர், லிங்காயத் சமூகத்தினரை ஈர்க்க பாஜக புதிய திட்டம்!!

முதலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தான் இரண்டரை ஆண்டுகளுக்கும், சிவகுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் முதல்வராக இருப்போம் என்று கூறி வந்த சித்தராமையா தற்போது தனது பேச்சை மாற்றிக் கொண்டுள்ளார். உயர்ந்த பதவிக்கு சிவகுமார் வரமாட்டார் என்று பேசி வருகிறார். இதுவும் தேர்தல் நேரத்தில் சிக்கலை உருவாக்குமோ என்ற அச்சத்தை கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் எம்எல்ஏக்கள் இணைந்து முதல்வரை தேர்வு செய்வார்கள் என்றும் சித்தராமையா கூறி வருகிறார்.

ராகுல் காந்தி & மல்லிகார்ஜூனே கார்கே:
கர்நாடகாவில் இந்த முறை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி இறங்குவார் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. ஏப்ரல் 5ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவரது சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ராவும் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைவராக காங்கிரஸ் தேர்வு செய்து இருக்கிறது. தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு தலித் சமூகத்தின் ஆதரவும், கல்யாண கர்நாடகாவில் அதிக செல்வாக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. 

click me!