
வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 வாரங்களுக்கு மேலாக, டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், புதுச்சேரி முதல்வர், திரைப்பட நடிகர் சங்கத்தினர் என பல தரப்பினரும், விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து பேசினர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, இன்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
விவசாய கடனை மத்திய அரசும், மாநில அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து 2 வாரத்துக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இதை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை.
ஏற்கனவே கரும்பு விவசாயிகளுக்கு, ரூ.400 கோடிக்குமேல் நிலுவை தொகை உள்ளது. அதையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி திமுக எம்பி திருச்சி சிவா தலைமையில், மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதற்கு தமிழக அரசுதான் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இன்று தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அரசோ, அவர்களுக்கு இருக்கும் வேலையை மட்டும் சரியாக பார்த்து கொண்டு இருக்கிறது. மக்களை பற்றியோ, விவசாயிகளின் கஷ்டங்களை பற்றியோ எதிலும் கவனம் செலுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.