கல்கி ஆசிரம வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக 500 கோடி பணம் ! 93 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் !!

Published : Oct 19, 2019, 08:01 AM IST
கல்கி ஆசிரம வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக 500 கோடி பணம் ! 93 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் !!

சுருக்கம்

கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனையில் ரூ.93 கோடி மதிப்பிலான ரொக்கம், வெளிநாட்டு பணம், தங்கம், வைர நகைகள். கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி சிக்கியதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டு, பூந்தமல்லி அருகே கல்கி ஆசிரமத்தை தொடங்கினார். ஆன்மிகவாதி என்ற அடையாளத்தால் பிரபலம் ஆனார்.

ஆந்திரா, கர்நாடகம் என இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவரது ஆசிரம கிளைகள் உதயமாயின. பக்தர்களும் பெருகினார்கள். சென்னையில் மட்டுமே 20 கிளைகள் திறக்கப்பட்டன.

காணிக்கை என்ற பெயரிலும், பூஜை கட்டணம் என்ற பெயரிலும் பணம் கொட்டோகொட்டென்று கொட்டியது. தங்க, வைர நகைகள் குவிந்தன. ஆனால் அரசுக்கு சேர வேண்டிய வரியை மட்டும் செலுத்த தயாரில்லை. அவர் பெருமளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அதைத் தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் குழு கடந்த 16-ந் தேதி தொடங்கி ஒரே நேரத்தில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, வரதய்யா பாளையம் ஆகிய பகுதிகளில் கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினார்கள்.

இந்த சோதனைகளில் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின. வெளிநாட்டு பணம் சிக்கியது. தங்க நகைகள், வைர நகைகள் கிடைத்தன. இருப்பினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளன என்ற பட்டியலுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டது. 

* 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.43 கோடியே 90 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

* வெளிநாட்டு பணம் என்ற வகையில், 2½ மில்லியன் அமெரிக்க டாலர் சிக்கியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்.

* 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.26 கோடி.

* 1,271 காரட் வைரக்கற்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி.

* கைப்பற்றப்பட்ட ரொக்கம், அமெரிக்க டாலர், தங்கம், வைரம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி ஆகும்.

* கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* கல்கி பகவான் குழுமம், இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்பெனிகளில் பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

ஓலா, உபெர்-க்கு டஃப் கொடுக்க வரும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் அதிரடி ஆரம்பம்!
சீன ஜி.பி.எஸ் கருவியோடன் வந்த பறவை.. கடற்படை தளம் அருகே பிடிபட்டதால் பரபரப்பு!