மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி ! நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை !!

By Selvanayagam PFirst Published Oct 18, 2019, 9:27 PM IST
Highlights

புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளதால், நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை, மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதியை (எம்.என்.பி.) பயன்படுத்த முடியாது என டிராய் அறிவித்துள்ளது.

நம் நாட்டில் நாளுக்கு நாள் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிறுவனங்களும் தரமான மொபைல் சேவையை வழங்க முயற்சி செய்து வருகின்றன. 

இருப்பினும் சில பகுதிகளில் சில நிறுவனங்களின் சேவை வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காமல் போய் விடுகிறது. உடனே வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தின் மொபைல் சேவைக்கு மாறி விடுகின்றனர். 2010க்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தின் மொபைல் சேவைக்கு மாற வேண்டுமானால் புதிய மொபைல் எண்ணை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பழைய நிறுவனத்தின் நம்பரை பெற முடியாது.

இந்நிலையில், 2010ல் மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றும் எம்.என்.பி. வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. 

வாடிக்கையாளரின் எம்.என்.பி. கோரிக்கையை நிறுவனம் 7 நாட்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விதிமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த விதிமுறையில் தற்போது தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் மாற்றங்கள் செய்துள்ளது.

புதிய விதிமுறையின் படி, ஒரே பகுதிக்குள் வேறு நிறுவன மொபைல் சேவைக்கு மாறும் வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு நிறுவனம் 2 வேலை நாட்களில் தீர்வு வழங்க வேண்டும். 

அதேசமயம் ஒரு வட்டத்திலிருந்து மற்றொரு வட்டம் என்றால் அதிகபட்சம் 5 வேலை நாட்களில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்த புதிய விதிமுறை நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

இதனால் நவம்பர் 4ம் தேதி 6 மணி முதல் நவம்பர் 10ம் தேதி இரவு 11.59 மணி வரை எம்.என்.பி. வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. அதன் பிறகு எம்.என்.பி. சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்  என டிராய் அறிவித்துள்ளது.

click me!