ஹிஜாப் தீர்ப்பு தொடர்பாக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்.. தஞ்சையில் கைதான உஸ்மானிக்கு கர்நாடகாவிலும் காப்பு!

By Asianet Tamil  |  First Published Mar 26, 2022, 10:03 PM IST

கர்நாட கநீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்துப் பேசிய விவகாரம் தொடர்பாக பெங்களூருவிலும் ஜமால் முகமது உஸ்மானி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை நேரில் ஆஜர்ப்படுத்த பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.


ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்து பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளரை கர்நாடக மாநிலப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஹிஜாப் விவகாரம்

Tap to resize

Latest Videos

கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பி.யூ. கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்குப் போட்டியாக காவித் துண்டை அவர்கள் அனிந்து வந்தனர். இந்த விவகாரம் வன்முறையாக மாறும் அளவுக்கு உருவெடுத்தது. இதனையடுத்து கர் நாடக அரசு கல்வி நிறுவனங்களில் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். பிற உடைகளை அணிந்து வர தடை விதித்தது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர் நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தஞ்சையில் கைது

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 18-ம் தேதிஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில்  தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருநெல்வேலியைச் சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி(43) என்பவர், பிரதமர் நரேந்திர மோடி, தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுத்து பேசிய வீடியோக்கள் வெளியாயின. இதனையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, ஜமால் முகமது உஸ்மானியை தஞ்சாவூர் போலீஸார் கைது செய்து, தஞ்சாவூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

பெங்களூருவில் கைது

இந்நிலையில், கர்நாட கநீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்துப் பேசிய விவகாரம் தொடர்பாக பெங்களூருவிலும் ஜமால் முகமது உஸ்மானி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை நேரில் ஆஜர்ப்படுத்த பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, தஞ்சாவூர் கிளை சிறைக்கு வந்த கர்நாடக மாநில போலீஸார், நீதிமன்ற சம்மனை காண்பித்து ஜமால் முகமது உஸ்மானியை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர். பலத்த பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்ட உஸ்மானியை 8 நாட்கள் விசாரிக்க கர்நாடக போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் உஸ்மானியின் கொலை மிரட்டல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு கர்நாடக அரசு ஆயத்தமாகி வருகிறது.

click me!