
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து, தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த வாரம் சென்னையில்முகாமிட்டு இருந்தனர். ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க நீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்தது. இந்த மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம். அவசரமாக விசாரிக்க முடியாது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என நீதிபதிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற கர்ணனின் மகன் எஸ்.கே.சுகன் அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், இந்த பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு, தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனாதிபதியை சந்திக்க முடியவில்லை. அதனால் ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளிடம் மனுவை அளித்ததாக தெரிவித்தார். எனது தந்தைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டவிரோதமானது. எனவே அவர் சரண் அடையமாட்டார் என்றும் சுகன் கூறினார்.