"பசுவைக் கொன்றால் 14 ஆண்டு சிறை; மனிதர்களைக் கொன்றால் 2 ஆண்டு சிறையா?" - நீதிபதி வேதனை!

First Published Jul 17, 2017, 12:57 PM IST
Highlights
judge condemns cow vigilantes


பசுவைக் கொன்றால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டம் இருக்கிறது. ஆனால் மனிதர்களைக் கொன்றால் 2 ஆண்டுகளே தண்டனை அளிக்க சட்டத்தில் இடமிருப்பதாக டெல்லி நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு டெல்லியில் உத்ஷப் பஷீன் என்பவர், தனது பிம்டபிள்யூ காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினார். வேகமாக சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்த அனுஜ் சவுகான் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற ஸ்ரீவஸ்த்தவா என்பவர் படுகாயமடைந்தார்.

இது தொடர்பான வழக்கு, டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, உத்ஷப் பஷீன் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியிருப்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, உத்ஷவ் பஷீனுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி சஞ்சீவ் குமார். அந்த தீர்ப்பில் நீதிபதி சஞ்சீவ் குமார், நாட்டில் மாட்டைக் கொன்றால் 5, 7 அல்லது 14 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், பொறுப்பற்ற முறையில் கார் ஓட்டி மனிதர்களைக் கொல்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரைதான் தண்டனை விதிக்க சட்டம் இடமளித்துள்ளது என்று வேதனை தெரிவித்தார்.

உத்ஷவ் பஷீனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் நகலை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பி வைக்கவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதால் நீதிமன்றம், பிரதமருக்கு தீர்ப்பின் நகலை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

click me!